Published : 15 Nov 2023 04:57 PM
Last Updated : 15 Nov 2023 04:57 PM
ஓசூர்: வேளாண் பணிக்கு ஆட்கள் தட்டுப்பாடு காரணமாக அஞ்செட்டி பகுதியில் நிலக்கடலை அறுவடை பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அஞ்செட்டி, தேன்கனிக் கோட்டை, உரிகம் உள்ளிட்ட பகுதியில் பருவ மழையை நம்பி மானாவாரி நிலங்களில் கேழ்வரகு,கொள்ளு. துவரை, அவரை மற்றும் எண் ணெய் வித்து பயிர்களான எள்ளு, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களை நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் சாகுபடி செய் துள்ளனர். இதேபோல, மலைக் கிராமங்களில் நிலக்கடலை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
இதில், உரிகம், கோட்டையூர், அஞ்செட்டி பகுதிகளில் சாகுபடி செய்துள்ள நிலக்கடலை பயிருக்கு இந்தாண்டு ஓரளவுக்குப் பருவமழை கைகொடுத்துள்ளதால் நன்கு விளைந்து தற்போது அறுவடைக்குத் தயாராக உள்ளது. இதனிடையே, வேளாண் பணிக்கு கூலி ஆட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், நிலக்கடலை அறுவடை பணி பாதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கோட்டை யூரைச் சேர்ந்த விவசாயி சீதாம்மா கூறியதாவது: அஞ்செட்டி பகுதியில் விளையும் நிலக்கடலை தரமாகவும், சுவையாகவும் உள்ளதால், கோவில்பட்டி, திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகதத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து கடலை மிட்டாய் தயாரிக்கவும், கடலை எண்ணெய் உற்பத்திக்கும் கொள்முதல் செய்கின்றனர். நடப்பாண்டில், பருவ மழையை நம்பி சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கடன் வாங்கி நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டனர். தற்போது, நிலக்கடலை அறுவடைக்குத் தயாராக உள்ளது. ஆனால், நூறு நாள் வேலை திட்டத்துக்கு பலர் பணிக்கு செல்வதால், வேளாண் பணியை புறக்கணித்து வருகின்றனர். இதனால், நிலக்கடலை அறுவடை பணி பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடர்ந்து பெய்த மழைக்கு நிலத்தில் விளைந்த நிலக்கடலை துளிர்விட்டு முளைப்பு விடத்தொடங்கியுள்ளது. இதை அறுவடை செய்ய முடியாது. செய்தாலும், தரமானதாக இருக்காது. எங்கள் பகுதி விவசாயிகளுக்குச் சந்தை வழிகாட்டுதல் இல்லாததால், இடைத்தரகர்கள் மூலம் நிலக்கடலையை குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் நிலையில், தற்போது அறுவடை பிரச்சினை பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. நூறு நாள் திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை வேளாண் பணியில் ஈடுபடுத்த ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதற்கான வழிமுறைகளை விவசாயிகளுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT