Published : 14 Nov 2023 06:38 PM
Last Updated : 14 Nov 2023 06:38 PM

வெளி மாநிலங்களுக்கு செல்லும் திருப்பூர் பின்னலாடைத் தொழில்? - சலுகைகளை அள்ளிவீசி அச்சாரமிட்ட பிஹார் மாநில அரசு

திருப்பூர் ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றும் பிஹார் மாநில தொழிலாளர்கள்.

திருப்பூர்: பின்னலாடைத் தொழிலுக்கு பல்வேறு சலுகைகளை பிஹார் மாநில அரசு அறிவித்துள்ளதால் திருப்பூரில் பின்னலாடைத் தொழிலில் ஈடுபட்டுள்ள வர்களும், தொழிலாளர்களும் பிஹார் மாநிலத்துக்கு படையெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக ‘டீமா’ சங்கத் தலைவர் எம்.பி.முத்துரத்தினம் தெரிவித்தார். திருப்பூர் பல்லடம் சாலையில் சாய ஆலைத்தொழிலில் ஈடுபட்டுள்ள கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவர் கூறும்போது, “கடந்த கால தீபாவளி பண்டிகையை காட்டிலும் தற்போது தொழிலுக்கு நெருக்கடிதான்.

போதிய ஆர்டர் இல்லாததால், எங்களுக்கான தொழில் வாய்ப்புகள் இல்லை. இந்நிலையில் பிஹார் மாநிலத்தில் பின்னலாடைத் தொழிலை பிரம்மாண்டமாக தொடங்கும் விதத்தில், பல்வேறு சலுகைகளை அம்மாநில அரசு வாரி வழங்கியுள்ளது. திருப்பூரின் தொழில் வர்த்தக வாய்ப்புகள், பிற மாநிலங்களுக்கு செல்வதற்கான ஆரம்ப எச்சரிக்கை மணிதான் இது’’ என்றார்.

திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் (டீமா) எம்.பி.முத்துரத்தினம் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: திருப்பூர் பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த பிற தொழில்கள் என வடமாநிலங்களை சேர்ந்த 3 லட்சத்துக்கும் அதிகமானோர் திருப்பூரில் தங்கி பணியாற்றி வருகின்றனர். இதில் பிஹார் மாநில தொழிலாளர்கள் பலர், பின்னலாடைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பிஹார் மாநில அரசு அங்கு பின்னலாடைத் தொழிலை பிரம்மாண்டமாக விரிவுபடுத்தும் நோக்கில் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.

அதாவது திறன் வாய்ந்த தொழிலாளர்களுக்கு மானியம், தொழில் தொடங்க கட்டணமில்லாத முத்திரைத் தாள் வசதி, தொழில் கட்டிடங்களுக்கு வரிச்சலுகை, ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ரூ.2 என சலுகைகளை அளித்து, இங்கிருக்கும் பிஹார் மாநிலத்தவர்களை அங்கு இழுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அம்மாநிலத்தை சேர்ந்த அதிகாரிகள் திருப்பூரில் ஆய்வு செய்தனர். அதன்பின்னர் இந்த வாய்ப்புகளை அங்குள்ள மாநில அரசு ஏற்படுத்தியுள்ளது.

அதேசமயம் தமிழ்நாட்டில் நடப்பதை எண்ணி வேதனைப்படக்கூடிய சூழலில்தான் இங்குள்ள தொழில் துறையினர் உள்ளனர். அதாவது, மின்சார நிலைக்கட்டணம், பீக் ஹவர்ஸ் கட்டணம், சோலார் உள்ளிட்டவற்றுக்கு கட்டணம் என இந்த தொழில் முடங்கிப் போவதற்கான அனைத்து விஷயங்களும் தமிழ்நாட் டில் அரங்கேறி வருகிறது. இவற்றை முழுமையாக திரும்பப்பெற வேண்டும். பிஹார் மாநிலத்தில் குறைந்த செலவில் தொழில் தொடங்கும்போது, அங்குள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இங்கிருந்தும் திறன்வாய்ந்த தொழிலாளர்கள் அங்கு சென்று, வேலை தரும் புதிய பனியன் நிறுவனங்களை தொடங்கக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே அதிகமான நூற்பாலைகள் இங்குதான் இருந்தன.ஒருகாலத்தில் வடமாநிலத்தவர்கள் பருத்தி கொள்முதல் செய்ய இங்கு வருவார்கள் ஆனால் பருத்தித் தொழிலை தமிழ்நாட்டில் கைவிட்டதால், இன்றைக்கு இங்கிருப்பவர்கள் வடமாநிலங் களுக்கு சென்று பருத்தி கொள்முதல் செய்கின்றனர். தமிழ்நாடு அரசு இருக்கின்ற தொழில் வாய்ப்புகளை மேலும் அழியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு உதாரணமே பருத்தி தான். தமிழ்நாட்டில், பருத்தி வேளாண்மையை ஊக்கப்படுத்த வேண்டும்.

பிஹார் மாநில அரசின் சலுகைகளை போல், தமிழக அரசும் பல்வேறு சலுகைகளை தொழில்துறைக்கு வழங்க வேண்டும். தொழிலில் இருந்து யாரும் வெளியேறாத வகையில் மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். பின்னலாடைத் தொழிலுக்கு சிறப்பு திட்டங்களை உருவாக்க வேண்டும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை பாதுகாத்து, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை நிலையான இடத்தில் நிறுத்தி வைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x