Published : 12 Nov 2023 04:27 AM
Last Updated : 12 Nov 2023 04:27 AM

நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கோலாகலம்: ரூ.3.5 லட்சம் கோடியை தாண்டியது வர்த்தகம்

சென்னை சேத்துப்பட்டில் உள்ள எஸ்.ஆர்.சுப்பிரமணியன் சர்வோதயா மாணவிகள் விடுதியில் தீபாவளியை உற்சாகமாய் கொண்டாடிய மாணவிகள். படம்: எஸ்.சத்தியசீலன்

புதுடெல்லி: தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை காலத்தில் நாடு முழுவதுமான வர்த்தகம் ரூ.3.5 லட்சம் கோடியை தாண்டியுள்ளது என்று அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஒரேநாளில் தங்கம், வெள்ளி மட்டும் ரூ.30,000 கோடிக்கு விற்பனையாகி உள்ளது.

தீபாவளியை முன்னிட்டு நாடு முழுவதும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பாகவே விற்பனை களை கட்டத் தொடங்கியது. இதுதொடர்பாக அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு (சிஏஐடி) நாடு முழுவதும் 30 நகரங்களில் ஆய்வு நடத்தியது. இதில் கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை கால விற்பனை அமோகமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக சிஏஐடி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தீபாவளியை ஒட்டி நாடு முழுவதும் சுமார் 65 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தங்கம், வெள்ளி நகைகள், புதிய வாகனங்கள், புத்தாடைகள், வீட்டு உபயோக பொருட்கள், பரிசு பொருட்கள், மின்னணு சாதனங்கள், மளிகை பொருட்கள், காய்கனிகள், அழகு சாதன பொருட்கள், பட்டாசு, இனிப்பு வகைகளை வாங்கி குவித்து வருகின்றனர்.

ஓட்டல்கள், திரையரங்குகள், கேளிக்கை விடுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. நாடு முழுவதும் சுமார் 35 லட்சம் திருமணங்கள் நடைபெறுகின்றன.

தீபாவளியை ஒட்டி உணவு தானியங்கள், மளிகை பொருட்கள் விற்பனை 13 சதவீதம் அதிகரித்துள்ளது. ஜவுளி விற்பனை 12 சதவீதம், தங்க நகைகள் விற்பனை 9 சதவீதம், உலர் பழங்கள் விற்பனை 4 சதவீதம், மின்னணு சாதனங்கள் விற்பனை 8 சதவீதம், பரிசு பொருட்கள் விற்பனை 8 சதவீதம், அழகுசாதன பொருட்கள் விற்பனை 6 சதவீதம், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை 3 சதவீதம் வரை அதிகரித்துள்ளன.

ஆட்டோமொபைல்ஸ் துறையில் சுமார் 20 சதவீதம் அளவுக்கு வாகனங்களின் விற்பனை அதிகரித்திருக்கிறது. தீபாவளி பண்டிகை காலத்தில் ஒரு நபருக்கு ரூ.5,500 என்ற வகையில் செலவு செய்யப்படுகிறது. இதன்படி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை கால விற்பனை ரூ.3.5 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.

தொடர் பிரச்சாரம் காரணமாக இந்திய வணிகர்கள், சீன தயாரிப்புகளுக்கு பதிலாக உள்நாட்டு தயாரிப்புகளுக்கே முக்கியத்துவம் அளிக்கின்றனர். இதன்காரணமாக சீனாவுக்கு ரூ.1 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தங்கம் விற்பனை அமோகம்: தீபாவளியின் தொடக்கமாக தந்தேரா தினம் கொண்டாடப்படுகிறது. தன்வந்தரி பகவான் அவதரித்த இந்த நாளில் தங்கம், வெள்ளி, வாகனங்கள், சொத்துகள் வாங்கினால் ஆண்டு முழுவதும் செல்வம் பெருகும் என்று மக்கள் நம்புகின்றனர். கடந்த 10-ம் தேதி தந்தேரா தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் தங்கம், வெள்ளி அமோகமாக விற்பனையானது.

இதுகுறித்து அகில இந்திய நகைக்கடை உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தேசிய தலைவர் பங்கஜ் அரோரா கூறியதாவது:

கடந்த தந்தேரா தினத்தில் நாடு முழுவதும் 22 டன் தங்க நகைகள் விற்பனையாகின. இந்த ஆண்டு 41 டன் தங்க நகைகள், 400 டன் வெள்ளி நகைகள், பொருட்கள், நாணயங்கள் விற்பனையாகி உள்ளன. இதன்படி ஒரேநாளில் ரூ.30,000 கோடிக்கு தங்கம், வெள்ளி நகைகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மாருதி சூசுகி நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஷசாங்க் வஸ்தவா கூறும்போது, “வழக்கமான வாகன விற்பனையை விட 21 சதவீதம் கூடுதலாக வாகனங்களை விற்பனை செய்துள்ளோம்" என்றார்.

ஹூண்டாய் மோ்டார் நிறுவனம் கடந்த ஆண்டைவிட வாகன விற்பனை இருமடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. மின்னணு சாதனங்களின் விற்பனை 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

தீபாவளியை ஒட்டி ஆன்லைன் வணிகமும் கடந்த ஆண்டைவிட 15 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. காற்று மாசு குறித்த பல்வேறு கட்டுப்பாடுகளால் பட்டாசு விற்பனை மட்டும் சரிவை சந்தித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x