Published : 10 Jan 2018 10:09 AM
Last Updated : 10 Jan 2018 10:09 AM
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தி அருகே ரூ. 1,800 கோடியில் அமைய உள்ள அப்பல்லோ டயர் தொழிற்சாலைக்கு நேற்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டினார்.
ஸ்ரீகாளஹஸ்தி அடுத்துள்ள வரதய்ய பாளையம் மண்டலம், சின்ன பாண்டூரு பகுதியில் 200 ஏக்கரில் ரூ. 1,800 கோடி முதலீட்டில் அப்பல்லோ டயர் ஆலை அமைய உள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் பிரிந்த பின்னர், புதிய ஆந்திர மாநிலத்தின் எதிர்காலம் கேள்வி குறியாக இருந்தது. போதிய நிதி இல்லை. தலை நகரம் இல்லை. ஆனால் மக்கள் என் மீது வைத்த நம்பிக்கைக்கு ஏற்ப நான் ஆட்சியை தொடங்கினேன். மாநிலத்தில் புதிய தொழிற்சாலைகள் அமைந்தால் தான் ஏழ்மை ஒழியும். ஆதனால், தொழில்தொடங்க முன்வருமாறு பல்வேறு நாடுகளுக்கு சென்று அங்குள்ள நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்தேன். அதன்படி தற்போது கடந்த மூன்றரை ஆண்டுகளில் ரூ. 24,600 கோடி முதலீடு செய்ய பல நிறுவனங்கள் முன் வந்துள்ளன. இசுசு கார் உற்பத்தி தொழிற்சாலை உட்பட பல செல்போன் நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளை ஆந்திராவில் அமைத்துள்ளன.
விரைவில் ஆந்திராவின் ஸ்ரீசிட்டியில் ஹீரோ தொழிற்சாலை, விஜயவாடாவில் அசோக் லேலண்ட், பாரத் ஃபோர்ட் கார் தொழிற்சாலைகள் அமைய உள்ளன. மேலும் பல முன்னணி நிறுவனங்கள் அமராவதி பகுதியில் அமைய உள்ளன. ஆந்திர மாநிலத்தில் ஆட்டோமொபைல் தொழில் நிறுவனங்கள் தொடங்க மிகவும் வசதியாக உள்ளதாக பல நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன. இங்கு புதிய நிறுவனம் தொடங்க முன் வருவோருக்கு வெறும் 21 நாட்களில் தேர்வு செய்த இடம் உட்பட அனைத்து அனுமதியும் ஆன்லைன் மூலமாகவே வழங்கப்படுகிறது.
வருங்கால இளைஞர்களுக்கு அதிக அளவில் ஆந்திராவில் வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை வரை கடல்வழிப்பாதை வணிகத்திற்கு மிகவும் உபயோகமாக இருக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், சென்னை-நெல்லூர்-திருப்பதி மூன்று நகரங்களையும் இணைக்கும் வகையிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் சந்திரபாபு நாயுடு கூறினார்.
நிகழ்ச்சியில் ஆந்திர மாநில தொழில் துறை அமைச்சர் அமர்நாத் ரெட்டி, தகவல் தொழில்நுட்ப அமைச்சர் லோகேஷ், அப்பல்லோ டயர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஓம்கார் எஸ். கன்வர், துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டைரக்டர் நீரஜ் கன்வர் மற்றும் அப்பல்லோ நிறுவன உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT