Published : 06 Nov 2023 04:04 AM
Last Updated : 06 Nov 2023 04:04 AM
சிவகாசி: தீபாவளி பண்டிகை நெருங்கியதை அடுத்து சிவகாசி பகுதிகளில் உள்ள பட்டாசு விற்பனை கடைகளில் பட்டாசு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து பட்டாசு வாங்குவதற்காக வாகனங்களில் சிவகாசிக்கு அதிகளவில் மக்கள் வருவதால், நகரின் முக்கியச் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சிவகாசியில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகள் நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறை மற்றும் மொத்த விற்பனைக் கடைகள் உள்ளன.
சிவகாசி பட்டாசு கடைகளில் 50 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் பட்டாசு விற்பனை செய்யப்படுவதாலும், புதிய ரகங்களை நேரடியாக வெடித்து பார்த்து வாங்கலாம் என்பதாலும் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் வாடிக்கையாளர்கள் சிவகாசி வருகின்றனர்.
பேருந்து மற்றும் ரயிலில் பட்டாசு எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், பட்டாசு வாங்க வரும் பொதுமக்கள் தனித் தனி வாகனங்களில் வருகின்றனர். சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், தஞ்சாவூர், ஈரோடு, மதுரை, திண்டுக்கல் மற்றும் கேரளம் பதிவு எண் கொண்ட வாகனங்களில் அதிக அளவில் வருகின்றனர்.
சிவகாசியில் தனியாக வாகன நிறுத்துமிடம் இல்லாததால், சாலையோரங்களில் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் சிவகாசியில் முக்கிய சாலைகளான விருதுநகர் சாலை, சாத்தூர் சாலை, வெம்பக்கோட்டை சாலை, காரனேசன் சந்திப்பு, பஜார் வீதி, சிவன் கோயில் ரதவீதிகள், விஸ்வ நத்தம் சாலை, நாரணாபுரம், செங்கமல நாச்சியார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் நெரிசல் ஏற்படுகிறது.
சிவகாசியில் போக்குவரத்து நெரிசலை சீர்படுத்தவும், பொதுமக்கள் பாதுகாப்புக்காகவும் கூடுதலாக 80 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக டி.எஸ்.பி. தனஞ்செயன் தெரிவித்தார். மேலும் வெளிமாநில மற்றும் பிற மாவட்ட மக்கள் யாரையும் நம்பி ஏமாறாத வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT