Published : 04 Nov 2023 05:28 PM
Last Updated : 04 Nov 2023 05:28 PM
புதுடெல்லி: வெங்காயத்தை கிலோ ரூ.25 என்ற விலையில் விற்பனை செய்ய மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
கரீஃப் பருவப் பயிர் வரத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக வெங்காய விலை அதிகரிப்பிலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்கும் வகையில், கிலோ ஒன்றுக்கு ரூ.25 என்ற மானிய விலையில் விற்பனை செய்ய மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன்படி, நுகர்வோர் நலத் துறை, இந்திய தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு (என்.சி.சி.எஃப்), இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைக் கூட்டமைப்பு (நாஃபெட்), மத்திய பண்டகசாலை, மாநில கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களால் இயக்கப்படும் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் நடமாடும் வேன்கள் மூலம் ஒரு கிலோ வெங்காயத்தை ரூ.25 என்ற மானிய விலையில் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது.
2023, நவம்பர் 2-ம்தேதி வரை, நாஃபெட் 21 மாநிலங்களில் உள்ள 55 நகரங்களில் நிலையான விற்பனை நிலையங்கள் மற்றும் நடமாடும் வேன்கள் உட்பட 329 சில்லறை விற்பனை மையங்களை அமைத்துள்ளது. இதேபோல், என்.சி.சி.எஃப் 20 மாநிலங்களில் 54 நகரங்களில் 457 சில்லறை விற்பனை மையங்களை அமைத்துள்ளது.
ரபி மற்றும் கரீஃப் பயிர்களுக்கு இடையிலான பருவகால விலை ஏற்றத்தாழ்வைக் கட்டுப்படுத்துவதற்காக, ரபி வெங்காயத்தை அடுத்தடுத்த அளவீடு மற்றும் இலக்கு வெளியீடுகளுக்கு கொள்முதல் செய்வதன் மூலம் வெங்காய இருப்பை அரசு பராமரிக்கிறது. 2022-23 ஆம் ஆண்டில் 2.5 லட்சம் மெட்ரிக் டன் என்பதிலிருந்து இந்த ஆண்டு, இருப்பு அளவு 7 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை 5.06 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு, மீதமுள்ள 2 இலட்சம் மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
பருவ மழை மற்றும் வெள்ளை ஈ தாக்குதலால் ஏற்பட்ட விநியோக இடையூறுகள் காரணமாக 2023 ஜூன் கடைசி வாரத்தில் இருந்து தக்காளியின் விலை உயர்ந்தபோது, மத்திய அரசு தலையிட்டு, உற்பத்தி செய்யும் கர்நாடகா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து என்.சி.சி.எஃப் மற்றும் நாஃபெட் மூலம் தக்காளியை கொள்முதல் செய்து முக்கிய நுகர்வு மையங்களில் நுகர்வோருக்கு மானிய விலையில் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT