Published : 02 Nov 2023 07:34 PM
Last Updated : 02 Nov 2023 07:34 PM
மேட்டூர்: தீபாவளிக்கு குறைந்த நாட்களே உள்ள நிலையில், தற்காலிக பட்டாசுக் கடை வைக்க உரிமம் பெற முடியாமல் சேலம் மாவட்ட வியாபாரிகள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
நாடு முழுவதும் வரும் 12-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. சமீப காலமாக, உரிய அனுமதியின்றி பட்டாசு கடைகள் அமைப்பதால் வெடி விபத்துகள் அதிகளவில் நடந்தன. இதனை கருத்தில் கொண்டு, தீபாவளி பண்டிகைக்கு தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க சேலம் மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், அதற்காக விண்ணப்பித்தவர்களுக்கு உரிமமும் இன்னும் வழங்கப்படவில்லை.
இதுகுறித்து, தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க விண்ணப்பித்துள்ள வியாபாரிகள் கூறியது: “தீபாவளி பண்டிகையையொட்டி, மாவட்ட புறநகர் பகுதியில் 400-க்கும் மேற்பட்டோர் கடைகள் அமைக்க விண்ணப்பித்திருந்தோம். கடந்த சில நாட்களில் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதை கருத்தில் கொண்டு, புறநகர் பகுதியில் பட்டாசு கடை அமைத்தால் அதிலிருந்து 50 மீட்டர் சுற்றளவுக்குள் குடியிருப்புகளோ, வேறு கடைகளோ இருக்கக் கூடாது. இல்லையென்றால் திறந்தவெளி மைதானங்களில் கடை அமைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்காக, ஒவ்வொரு தாலுகாவுக்கும் ஒரு திறந்தவெளி மைதானம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால், தாலுகா அளவில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டால் தொழில் பாதிக்கப்படும். பொதுமக்களும் பட்டாசுகளை வாங்க நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கும். மழைக் காலம் என்பதால் வியாபாரம் பாதிக்கும். பலகாரச் சீட்டு, ஆன்லைன் மூலமாக ஏராளமானோர் பட்டாசுகளை வாங்கி விட்டனர்.
3 மாதங்களுக்கு முன்பே பட்டாசுக் கடை அமைக்க ஆய்வு செய்து காவல் துறையும், தீயணைப்புத் துறையும் தடையில்லா சான்றிதழ் வழங்கிவிட்டன. இதையொட்டி, பட்டாசு ஆர்டர், கடைக்கு வாடகை என அனைத்துப் பணிகளும் முடிந்து விட்டன. இந்நிலையில், தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக மாவட்ட நிர்வாகத்தின் உரிமம் கிடைக்காமல் கடைகள் அமைக்க முடியவில்லை. இதனால் பட்டாசுகளை கிடங்கிலேயே வைத்துள்ளோம். சேலத்தை தவிர அனைத்து மாவட்டங்களிலும் கடை உரிமையாளர்கள் விண்ணப்பித்த இடத்திலேயே கடை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கட்டுப்பாடுகள் காரணமாக ஆர்டர் செய்த பட்டாசுகளை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யவும் வாய்ப்புள்ளது. இதனால் பெரும் அசம்பாவிதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. நடப்பாண்டில், வழக்கம் போல கடைகள் செயல்பட அனுமதி வழங்க வேண்டும். அடுத்த ஆண்டிலிருந்து, மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கும் இடங்களில் கடைகளை அமைத்துக் கொள்கிறோம்” என்று அவர்கள் கூறினர்.
இது குறித்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், ''வெடி விபத்து காரணமாகத் தான், தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகம் தாலுகாவுக்கு ஓர் இடம் தேர்வு செய்துள்ளது. அந்த இடத்தில் கடைகள் அமைத்துக் கொள்வதாக இருந்தால் உரிமம் வழங்கப்படும். பட்டாசுக் கடை உரிமையாளர்களின் கோரிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம் தான் பரிசீலிக்க வேண்டும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT