Published : 02 Nov 2023 05:37 AM
Last Updated : 02 Nov 2023 05:37 AM
திருச்சி: பட்டு வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள் குறைந்த நாளில் அதிக லாபம் பெறலாம் என்றும், இதற்கு மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்குவதாகவும் திருச்சி மண்டல பட்டு வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார். திருச்சி பட்டு வளர்ச்சித்துறை மண்டலத்துக்குட்பட்ட திருச்சி மாவட்டத்தில் 1,200 ஏக்கர், புதுக்கோட்டையில் 580, அரியலூர்-பெரம்பலூர் ஆகியவற்றில் 440, தஞ்சாவூரில் 350 ஏக்கர், திருவாரூர்-மயிலாடுதுறை - நாகப்பட்டினம் ஆகியவற்றில் 200 என மொத்தம் 2,700-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் பட்டுப்புழு வளர்க்க உதவும் மல்பெரி செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
இந்த 8 மாவட்டங்களில் 1,300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பட்டுப்புழு வளர்ப்பு மனை அமைத்து பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளுக்கு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் தொழிலாக இருக்கும் பட்டு வளர்ப்பை ஊக்கப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதலாக 100 ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை திருச்சி மண்டல பட்டு வளர்ச்சித்துறை சீராக எட்டி வருகிறது.
இதுகுறித்து பட்டு வளர்ச்சித்துறை திருச்சி மண்டல உதவி இயக்குநர் ரெங்கபாப்பா கூறியது: இன்றைய காலகட்டத்தில் விவசாயிகளுக்கு மாற்று வருமானம் என்பது அவர்கள் சார்ந்த விவசாய தொழிலிலிருந்தே ஈடு செய்ய முடியும் என்பது பட்டு வளர்ப்பின் மூலம் சாத்தியப்படும்.
பட்டுப்புழு வளர்ப்பு மனை அமைக்க மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்குகின்றன. மல்பெரி செடி நடவு செய்த 3-வது மாதத்திலிருந்தே புழுக்களுக்குத் தேவையான இலை (இரை) கிடைக்கும். இச்செடிகள் வளர்வதற்குள் மனை அமைத்துவிடலாம். மனை அமைத்த உடனேயே அரசு பட்டு வித்தகங்களிலிருந்து பட்டுப்புழு முட்டைகளை பெற்று வளர்க்கத் தொடங்கலாம்.
முதல் முதலாக பட்டு வளர்ப்பில் ஈடுபடும் ஒரு விவசாயி, 35 நாட்களிலேயே வளர்ந்த பட்டுக்கூடுகளை விற்பனை செய்து லாபம் பார்க்கலாம். முறையாக பராமரித்து வந்தால் ஆண்டுக்கு 6 முதல் 10 முறைக் கூட லாபம் பார்க்கலாம். 100 சதவீதம் முறையாக பட்டுப்புழு வளர்க்கும்போது ஒரு ஏக்கருக்கு சராசரியாக ஒவ்வொரு அறுவடையிலும் ரூ.55 ஆயிரம் வருமானம் வரும். செலவு போக ரூ.40 ஆயிரம் லாபம் கிடைக்கும்.
மல்பெரி என்பது பல்லாண்டு பயிர் என்பதால், நடவு செலவு என்பது ஒருமுறை மட்டுமே. அதன்பின் தொழு உரமிட்டு செடிகளை பராமரித்து வந்தால் போதும். மனை அமைத்தலும் ஒரு முறை முதலீடு என்பதால் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் பட்டுப்புழு வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆண்டுக்கு கூடுதலாக100 ஏக்கர் மல்பெரி நடவு செய்யும் பரப்பளவு அதிகரித்துள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT