Last Updated : 02 Nov, 2023 08:57 AM

 

Published : 02 Nov 2023 08:57 AM
Last Updated : 02 Nov 2023 08:57 AM

கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி பகுதிகளில் இடைப்பருவ மா மகசூல் 60% பாதிப்பு

போச்சம்பள்ளி அருகே சந்தூர் பகுதியில் உள்ள தோட்டத்தில் மா மரத்தில் காய்த்துள்ள இடைப் பருவ மாங்காய்கள். அறுவடை செய்யப்பட்ட இடைப் பருவ மாங்காய்கள்.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி பகுதியில் நிகழாண்டில் இடைப்பருவ மா விளைச்சல் 60 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒரு டன் மாங்காய் ரூ.80 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் மா உற்பத்தியில் கிருஷ்ணகிரி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இங்கு சுமார் 34 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் மாங்கனிகள் மிகவும் சுவையாகவும், தரமாகவும் உள்ளதால் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மா சாகுபடியைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் ஜனவரி வரை மா மரம் பராமரிப்பு பணி நடைபெறும். அதன் பின்னர் மருந்து தெளித்து மரங்கள் பராமரிக்கப்படும். தொடர்ந்து, தை மாதத்தில் பூக்கள் பூக்கும். ஏப்ரல், மே மாதங்களில் மா சீசன் தொடங்கி ஜூன், ஜூலையில் சீசன் முற்றிலும் நிறைவடையும்.

இந்நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு முதல் மாவட்டத்தில் பல விவசாயிகள் இடைப்பருவ மா சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். சீசனை விட இடைப்பருவ மா மகசூல் அதிகரிப்பும், நல்ல வருவாய் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனிடையே, நிகழாண்டில் இடைப் பருவ பூக்கள் பூக்கத் தொடங்கிய போது பெய்த மழையால் 60 சதவீதம் மகசூல் குறைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

இது தொடர்பாக கங்கா வரத்தைச் சேர்ந்த விவசாயி சித்திரை செல்வன் கூறியதாவது: இடைப் பருவத்துக்காக மா மரங்களில் பூக்கள் வளர விடாமல் தடுத்து, செப்டம்பர் மாதம் பூக்கள் பூக்க ஏதுவாக மரங்கள் பராமரிக்கப்படும். அதையடுத்து சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு தேவையான உரங்கள் இடப்படும்.

இதற்கு ஏக்கருக்கு ரூ.2 லட்சம் வரை செலவாகும். பெங்களூரா, நீலம் மற்றும் செந்தூரா உள்ளிட்ட ரக மாங்காய்கள் மட்டுமே இடைப் பருவ மா உற்பத்தி கிடைக்கும். இந்தாண்டு இடைப்பருவ சீசன் தொடங்கும் போது பெய்த மழையால் பூக்கள் உதிர்ந்தும், சில மரங்களில் பூக்கள் பூக்கவில்லை. இதனால், 40 சதவீதம் மட்டுமே மகசூல் கிடைத்துள்ளது.

தற்போது பெங்களூரா, செந்தூரா ரக மாங்காய் ஒரு டன் ரூ.70 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரையும், நீலம் ரக மாங்காய் ரூ.60 ஆயிரம் வரை விலை கிடைக்கிறது. இங்கிருந்து மாங்காய்கள் சென்னை, கோவை, டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் விற்பனைக்குச் செல்கிறது.

கடந்த ஜனவரியில் இடைப் பருவத்தில் விளைவிக்கப்பட்ட மா ஒரு டன் ரூ.1.50 லட்சத்துக்கு விற்பனையானது குறிப்பிடதக்கது. நிகழாண்டில் இடைப் பருவத்துக்காக பராமரிக்கப்பட்ட சில மாமரங்களில் டிசம்பர், ஜனவரியில் காய்கள் மகசூலுக்கு வரும் என்பதால், வழக்கமான மா சீசன் தொடங்கும் வரை மாங்காய்கள் தடையின்றி கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x