Published : 01 Nov 2023 03:35 PM
Last Updated : 01 Nov 2023 03:35 PM

தூய்மைப் பணி எதிரொலி | அலுவலக குப்பைகளை அகற்றியதால் மத்திய அரசுக்கு ரூ.500 கோடி வருவாய்!

புதுடெல்லி: சமீபத்தில் நடந்து முடிந்த தூய்மைப் பணியின்போது அலுவலக குப்பைகளை அப்புறப்படுத்தியதன் மூலம் ரு.500 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நரேந்திர அரசு சிறப்பு தூய்மைப் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அரசு அலுவலகங்களில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்றுவதன் மூலம் கடந்த 2021 முதல் 2023 வரை ரூ. 1,100 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. குப்பைகளை அகற்றுவதற்கான மூன்றாவது சிறப்பு பிரச்சாரம் இந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெற்றது. இந்த காலகட்டத்தில் தேவையற்ற பொருட்களை அகற்றியதன் மூலம் அரசு ரூ. 500 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக பணியாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தூய்மைக்கான சிறப்பு பிரச்சாரம் 3.0, நாடு முழுவதிலும் 2.53 லட்சத்திற்கும் அதிகமான அரசு அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்டன. இதன் பயனாக, ரூ. 500 கோடி வருவாய் ஈட்டியதோடு, அலுவலக பயன்பாட்டிற்காக 154 லட்சம் சதுர அடி இடமும் கிடைத்துள்ளது" என்று அந்த அறிக்கை கூறுகிறது.

"நடப்பாண்டில் 2.53 லட்சம் இடங்களில் தூய்மைப் பணிகள் நடந்த நிலையில், முந்தைய ஆண்டில் 1.01 லட்சம் இடங்களில் தூய்மைப் பணிகள் நடைபெற்றன. தூய்மைக்கான சிறப்பு பிரச்சாரத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் தூய்மைப் பரப்பளவு அதிகரித்து வருகிறது. அக்டோபர் 31 அன்று தூய்மைக்கான சிறப்பு பிரச்சாரம் 3.0 வெற்றிகரமாக முடிவடைந்தது. அனைத்து தரவுகளையும் தொகுத்த பிறகு, நவம்பர் 10, 2023 முதல் மதிப்பீட்டு கட்டம் தொடங்கும்" என்று மத்திய பணியாளர்களுக்கான இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x