Published : 31 Oct 2023 04:52 PM
Last Updated : 31 Oct 2023 04:52 PM
கோவை: கோவையில் உள்ள ‘சிட்கோ’ தொழிற்பேட்டை வளாகத்தில் தண்ணீர், சாக்கடை கால்வாய், சாலை, தூய்மை பணி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக பல ஆண்டுகளாக காத்திருப்பதாக தெரிவித்துள்ள தொழில்முனைவோர், அரசுத்துறைகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.
கோவை - பொள்ளாச்சி சாலை சுந்தராபுரம் அருகே அமைந்துள்ளது சிட்கோ தொழிற்பேட்டை வளாகம். கோவை மாநகராட்சியின் 99 மற்றும்100-வது வார்டுகளுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. வார்ப்படம், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இங்கு செயல்படுகின்றன. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். கோவை தொழில் வளர்ச்சியில் சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்திலுள்ள தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தொழிற்பேட்டையில் அடிப்படை வசதிகள் இல்லை என தொழில்முனைவோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தின் (கொசிமா) தலைவர் நடராஜன், முன்னாள் தலைவர் சுருளிவேல் ஆகியோர் கூறியதாவது: கோவையில் சிட்கோ தொழிற்பேட்டை கடந்த 1973-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மொத்தம் 80 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இத்தொழிற்பேட்டை வளாகத்தில் 350 தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன.
கோவைக்கு பெருமை சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இத்தொழிற்பேட்டையில் பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படாமல் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக சாலை புனரமைக்கப் படவில்லை. தெருவிளக்குகள் பல இடங்களில் எரிவதில்லை. இருப்பினும் மாதந்தோறும் பராமரிப்பு பணிகளுக்காக ‘சிட்கோ’ நிர்வாகத்துக்கு ஒவ்வொரு தொழில் நிறுவனத்தினரிடம் இருந்தும் ரூ.300 முதல் ரூ.500 வரை பெறப்படுகிறது. லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கப்படும் போதும் அதற்கேற்ப பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை.
சிட்கோ தொழிற்பேட்டை வளாகம் முழுவதும் பல இடங்களில் குப்பை மலைபோல் தேங்கி கிடக்கின்றன. இவற்றை அகற்ற கோரிக்கை விடுத்த போதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப் படவில்லை. தேங்கிகிடக்கும் குப்பையை அகற்றுவதுடன் தினமும் வளாகத்தில் தூய்மை பணி மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தண்ணீர் பிரச்சினை அதிகம் உள்ளது. சாக்கடை கால்வாய் அமைக்கப்படாததால் சுற்றுப்புற பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வரிகள் மட்டுமே வசூலிக்கப்படுகின்றன. மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. தொழிற்பேட்டை நுழைவுவாயில் அருகே அமைந்துள்ள சிட்கோ அலுவலகம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு டீ கடை நடத்தப்பட்டு வருகிறது. தொழிற்பேட்டை வளாகத்திற்கு தொழில் சார்ந்த நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளில் இருந்து பலர் வந்து செல்கின்றனர். அவர்கள் தொழிற்பேட்டையின் நிலையை பார்த்து முகம் சுளிக்கும் நிலை உள்ளது.
பல ஆண்டுகளாக தொழிற்பேட்டை வளாகத்தில் காணப்படும் அவல நிலைக்கு தீர்வு காணும் வகையில் சிட்கோ நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து உடனடியாக அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவதுடன் நிலுவையிலுள்ள தொழில்முனைவோர் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT