Published : 30 Oct 2023 10:13 PM
Last Updated : 30 Oct 2023 10:13 PM
கொல்கத்தா: கொல்கத்தா மாநிலம் சிங்குரில் உள்ள நானோ தொழிற்சாலையை மூடுவதற்கு மேற்கு வங்க அரசு டாடா குழுமத்துக்குச் சொந்தமான டாடா மோட்டார்ஸுக்கு ரூ.765.78 கோடியை வழங்க வேண்டும் என நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேற்கு வங்க மாநில தொழில் துறை மேம்பாட்டு நிறுவனம் செப்டம்பர் 2016 முதல் 11 சதவீத வட்டியுடன் கணக்கிட்டு இந்த தொகையை வழங்க வேண்டும் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மூலம் மேற்கு வங்க அரசுக்கும், டாடா குழுமத்துக்கும் இடையே நீடித்துவந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் தேசிய பங்குச் சந்தையில் வெளியிட்ட குறிப்பில் இந்தத் தீர்ப்பு குறித்து தெரிவித்துள்ளது. அதில், "சிங்குரில் உள்ள டாடா உற்பத்தி நிலைய பிரச்சினையில், மூன்று பேர் கொண்ட நடுவர் மன்றத்தில் ஒருமித்த தீர்ப்பின் மூலம் தீர்க்கப்பட்டுள்ளன. அதன்படி, ரூ.765.78 கோடி இழப்பீடாக திரும்பப் பெறுவதற்கு டாடா மோட்டார்ஸ் உரிமை பெற்றுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
பின்னணி: மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள சிங்குர் பகுதியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆலை அமைக்க இடம் ஒதுக்கப்பட்டது. ரத்தன் டாடாவின் கனவு திட்டமான நானோ கார் (ரூ. 1 லட்சம் விலை) ஆலை அமைக்க மாநில அரசு காட்டிய 6 இடங்களில் டாடா மோட்டார்ஸ் தேர்வு செய்தது சிங்குரைத்தான். அப்போது மேற்கு வங்க முதல்வராயிருந்த புத்ததேவ் பட்டாச்சார்யா தலைமையிலான அரசு டாடா மோட்டார்ஸுக்கு 997 ஏக்கர் நிலத்தை வழங்கியது.
விவசாய நிலமாக இருந்ததை தொழிற்சாலை கட்டுவதற்காக ஒதுக்கியதை அப்போது எதிர்க்கட்சியாய் இருந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்தது. ஆலைக்கு நிலம் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து 26 நாள்கள் உண்ணாவிரதம் இருந்தார் மம்தா பானர்ஜி. 2008-ம் ஆண்டு சிங்குர் ஆலையிலிருந்து நானோ கார்கள் சந்தைக்கு வரும் என டாடா நிறுவனம் அறிவித்திருந்தது.
ஆலைப் பணிகள் ஏறக்குறைய 70 சதவீதம் முடிவடைந்துவிட்ட நிலையிலும் போராட்டத்தின் தீவிரம் குறையவேயில்லை. இதையடுத்து 2008-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி சிங்குர் ஆலைத் திட்டத்தைக் கைவிடுவதாக ரத்தன் டாடா அறிவித்தார். அத்துடன் இந்த ஆலை குஜராத் மாநிலம் சனந்த் நகருக்கு இடமாற்றம் செய்வதாக அக்டோபர் 7-ம் தேதி அறிவித்தார்.
சிங்குரிலிருந்து டாடா நிறுவனம் வெளியேறியபோதிலும் நிலம் டாடா மோட்டார்ஸ் வசமே இருந்தது. நிலத்தை திரும்ப அளிக்க வேண் டும் என மாநில அரசு வழக்கு தொடர்ந்தது. ஆனால் அந்த நிலம் தங்களுக்குத் தேவை என டாடா மோட்டார்ஸ் தரப்பில் வாதிடப்பட்டது. இழுபறியாக நீடித்து வந்த இந்த வழக்கு கடந்த 2016ல் முடிவுக்கு வந்தது. நிலத்தை திரும்ப அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், நிலத்தை 10 வாரங்களுக்குள் அளவிட்டு உரிய விவசாயிகளிடம் அளிக்கவேண்டும் என்றும் கூறியது.
அந்த சமயத்தில் தனது அரசியல் வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றி இது என்றும், மன நிம்மதியோடு இறப்பேன் என்றும் மம்தா பானர்ஜி குறிப்பிட்டார். ஆனால் இந்த ஆலைக்கென டாடா நிறுவனம் ரூ. 1,400 கோடி வரை முதலீடு செய்துள்ளது. டாடா நானோ உதிரிபாகங்கள் சப்ளை செய்யும் 13 நிறுவனங்கள் முழுமையாக தங்களது ஆலையை இங்கு அமைத்திருந்தன. 17 நிறுவனங்களின் ஆலைகள் பல்வேறு கட்ட நிலையில் இருந்தன. அவை அனைத்தும் குஜராத்துக்கு இடம்பெயர்ந்தன. உதிரிபாக தயாரிப்பாளர்கள் மட்டும் ரூ.338 கோடி முதலீடு செய்திருந்தனர். அவை அனைத்தும் அப்படியே பாதியில் முடங்கியது.
நிலத்தை திரும்ப ஒப்படைப்பதால் நிலத்துக்கு அளித்த தொகை தொடர்பாக டாடா நிறுவனம் நடுவர் மன்றத்தை நாடியது. மாநில அரசாங்கத்துடனான அதன் குத்தகை ஒப்பந்தத்தின் கீழ் நடுவர் மன்றத்தை நாடிய நிலையில் இத்தனை ஆண்டுகளுக்குப் பின் டாடா நிறுவனத்துக்கு இதில் வெற்றி கிடைத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...