Published : 28 Oct 2023 04:37 PM
Last Updated : 28 Oct 2023 04:37 PM

திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி அகல ரயில் பாதை பணிகள் நிறைவு: உப்பு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியம்பள்ளி, கடினல்வயல், கோடியக்காடு ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதில், நேரடியாகவும், மறைமுகமாகவும் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை உப்பு உற்பத்தி நடைபெறும். இந்த 9 மாத காலங்களில், 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

நிகழாண்டில் ஜனவரி மாதம் உப்பு உற்பத்தி தொடங்கப்பட்ட நிலையில், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பெய்த பருவம் தவறிய மழையால் உப்பு உற்பத்தி தடைபட்டது. ஆனால், அதன்பின் தற்போது வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், உப்பு உற்பத்தி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து சிறு உப்பு உற்பத்தியாளர் இணையத்தின் செயலாளர் வி.செந்தில் கூறியதாவது: இப்பகுதியில் உப்பளத் தொழிலாளர்கள் தினமும் 7 மணி நேரம் வேலை செய்கிறார்கள். தினக்கூலியாக ஆண்களுக்கு ரூ.650-ம், பெண்களுக்கு ரூ.450-ம் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு 2,120 உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், 59 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுவதில்லை.

கடினல்வயல் பகுதியில் உப்பு சேகரிக்கும் பணியில்
ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.

ஆனால், உப்பளங்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் வேலை செய்கிறார்கள். எனவே, அரசு வயது தொடர்பான விதிமுறையை தளர்த்த வேண்டும். மேலும் உப்பளங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் வெறும் காலில்தான் வேலை செய்கிறார்கள். எனவே, அவர்களுக்கு ஷூ மற்றும் கருப்புக் கண்ணாடி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். போக்குவரத்து செலவினங்கள் உயர்ந்ததால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஒரு டன் ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்ட உப்பு, நிகழாண்டில் ரூ.600 முதல்ரூ.800 வரை விற்பனை செய்யப்படுகிறது.

அகல ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ள அகஸ்தியம்பள்ளி
ரயில் நிலையம்.

இதனிடையே, நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியம்பள்ளியிலிருந்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி இடையே அகல ரயில் பாதை பணிகள் நிறைவுற்றுள்ளன. இதைத் தொடர்ந்து, 18 ஆண்டுகளுக்கு பிறகு, ஜன.29-ம் தேதி முதல் திருத்துறைப்பூண்டி -அகஸ்தியம்பள்ளி இடையே பயணிகள் ரயில் சேவையும், சரக்கு போக்குவரத்தும் தொடங்க உள்ளதாக திருச்சி ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையடுத்து, அகஸ்தியம்பள்ளியில் இருந்து தொடர்ந்து ரயில்வே வேகன்கள் மூலம் உப்பு அனுப்பி வைக்கப்பட்டால் ரயில்வே துறைக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். மேலும், உப்பு உற்பத்தி பரப்பளவும், உப்பு உற்பத்தியும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்று உப்பு உற்பத்தியாளர்கள், வணிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x