Published : 27 Oct 2023 04:34 PM
Last Updated : 27 Oct 2023 04:34 PM
கோவை: ஆவின் சார்பில் உற்பத்தி செய்து விநியோகிக்கப்படும் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களுக்கு மக்களிடம்எப்போதும் வரவேற்பு இருக்கும். கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய லிமிடெட் எனப்படும் ஆவின் நிறுவனம் பேரூர் பச்சாபாளையத்திலும், விற்பனைப்பிரிவு அலுவலகம் ஆர்.எஸ்.புரத்திலும் உள்ளது.
ஆவின் நிறுவனத்தில் பால் ஊற்றும் உறுப்பினர்கள் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். உற்பத்தியாளர்களிடமிருந்து தினமும் சராசரியாக 1.50 லட்சம் லிட்டர்பால் கொள்முதல் செய்யப்பட்டு, முகவர்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மாவட்டம் முழுவதும் ஆவினுக்கு 1,300-க்கும் மேற்பட்ட பால் பூத்கள் உள்ளன. ஒவ்வோர் ஆண்டும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின்போது ஆவின் சார்பில் விதவிதமான, சுத்தமான ஆவின் நெய்யால் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகள் மற்றும் கார வகைகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். இதேபோல நடப்பாண்டும் ஆவின் நிர்வாகத்தின் சார்பில் இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரித்து ஆவின் பார்லர்கள், டீலர்ஷிப் விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்யும் பணி தொடங்கியுள்ளது.
இதுகுறித்து கோவை ஆவின் நிறுவன பொதுமேலாளர் பாலபூபதி கூறியதாவது: நடப்பாண்டு நெய் மைசூர்பா, கேரட் மைசூர்பா, பால் பேடா, காஜூ கட்லி, மில்க் கேக், பட்டர் முருக்கு, பட்டர் மிக்சர் உள்ளிட்ட இனிப்பு வகைகள் ஆவினில் தூய நெய்யால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் 250 கிராம் அளவுகளில் நெய் மைசூர்பா ரூ.140-க்கும், கேரட் மைசூர்பா ரூ.160-க்கும், பால் பேடா ரூ.130-க்கும், காஜூ கட்லி ரூ.199-க்கும், மில்க் கேக் ரூ.120-க்கும், 100 கிராம் எடை அளவில் பட்டர் முருக்கு ரூ.80-க்கும், மிக்சர் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆவின் நிர்வாகத்தின் சார்பில் நேரடியாக 5 ஆவின் பார்லர்களும், ஏஜென்சிகள் மூலம் நடத்தப்படும் 7 கடைகள், 32 டீலர்ஷிப் விற்பனையாளர்கள் மூலமும் ஆவினின் இனிப்பு மற்றும் கார வகைகள் விற்கப்படுகின்றன. டீலர்ஷிப் விற்பனையாளர்கள் மூலம் பல்வேறு வியாபாரக் கடைகளுக்கு இனிப்பு, கார வகைகள் சப்ளை செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
பண்டிகை நாட்கள் நெருங்கும்போது பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆவின் வாகனங்கள் மூலமாக இனிப்பு, கார வகைகள் விற்பனை செய்யப்படும். நடப்பாண்டு இதுபோன்ற 20 இடங்களில் தற்காலிகக் கடைகள் அமைத்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். அதுதவிர, பெட்ரோல் பங்க்-களில் ஆவின் பார்லர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள், நிறுவனங்களிடம் இருந்து ஆர்டர்கள் பெற்றும், உற்பத்தி செய்து அளிக்கிறோம். நடப்பாண்டு 38 டன் உற்பத்தி இலக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதில் 20 டன் முதல் 25 டன் கோவைக்கும், மீதமுள்ளவை அருகில் உள்ள ஆவின் நிறுவனத்துக்கும் வழங்கப்படும். ஆவின் நுகர்வோர், பொதுமக்கள் வாங்குவதைபோல மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுத் துறை நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள், தனியார் நிறுவனங்கள் என அனைத்துத் தரப்பினரும் ஆவின் இனிப்பு வகைகள் மற்றும் கார வகைகளை வாங்கி பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT