Published : 26 Oct 2023 11:14 PM
Last Updated : 26 Oct 2023 11:14 PM
சென்னை: இந்தியாவில் வேலை சார்ந்த உற்பத்தித்திறன் உலக அளவில் குறைவாக உள்ளது. அதன் காரணமாக இளைஞர்கள் தினமும் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என இன்ஃபோசிஸ் நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார். பாட்காஸ்ட் பேட்டி ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
“நாம் பணி சார்ந்த உற்பத்தித் திறனை மேம்படுத்தாத வரையில், ஊழலைக் குறைக்காத வரையில், அதிகார வர்க்கத்தில் ஏற்படும் தாமதத்தைக் குறைக்காத வரையில் வளர்ந்த நாடுகளுடன் நம்மால் போட்டியிட முடியாது. அதனால் எனது வேண்டுகோள் என்னவென்றால் இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். இதை நான் சொல்ல காரணம் இந்தியா எனது நாடு. இரண்டாம் உலகப் போருக்கு பிறகு ஜப்பான் மற்றும் ஜெர்மனி நாட்டில் இதுதான் நடந்தது. குறிப்பிட்ட ஆண்டு காலம் அனைத்து ஜெர்மனி மக்களும் கூடுதல் நேரம் வேலை செய்வதை உறுதி செய்தது.
மிகவும் கடினமாக உழைக்கும் வகையில் நாம் மாற வேண்டும். அது நடந்தால் தான் பொருளாதார ரீதியாக உலக அளவில் நம் நாடு வளர்ச்சி காண முடியும். அந்த செயல்திறன் அங்கீகாரம் அளிக்கும், அது மரியாதையையும், அதிகாரத்தையும் வழங்கும். அதனால் இந்த நாட்டின் இளைஞர்களுக்கு நான் சொல்வதெல்லாம் நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் என அடுத்த 20 - 50 ஆண்டுகள் வரை உழைக்க வேண்டும். அப்போது தான் ஜிடிபி-யில் முதல் அல்லது இரண்டாவது இடத்தில் இந்தியாவால் இருக்க முடியும்.
இந்தியாவின் தொலைதூர கிராமத்தில் உள்ள ஏழை குழந்தையின் எதிர்காலம் நமது இளைஞர்களின் தோள்களில் உள்ளது. அந்த பொறுப்பை அவர்கள் உணர வேண்டும்” என நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT