Last Updated : 26 Oct, 2023 08:56 AM

 

Published : 26 Oct 2023 08:56 AM
Last Updated : 26 Oct 2023 08:56 AM

வீட்டு தேவைக்கான பம்ப்செட் விற்பனை மந்தம்

கோவை நிறுவனத்தில் பம்ப்செட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.(கோப்பு படம்)

கோவை: தொழில் நகரான கோவை, பம்ப்செட் உற்பத்திக்கு பெயர் பெற்று விளங்குகிறது. கோவை மாவட்டத்தில் செயல்படும் பம்ப்செட் மற்றும் அதை சார்ந்த தொழில் நிறுவனங்களில் ஒரு லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

0.5 எச்.பி முதல் 50 எச்.பி மற்றும் அதற்கு மேல் திறன்கொண்ட பம்ப்செட் கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களில் தயாரிக்கப் படுகின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இத்தொழிலில் மந்த நிலை தொடர்வதாக தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்திய பம்ப்செட் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (இப்மா) தலைவர் கார்த்திக் கூறியதாவது: ”பொதுவாக கோடை காலங்களில் தேசிய அளவில் பம்ப்செட் தேவை அதிகம் இருக்கும். ஆனால் கடந்த கோடை காலத்தில் பம்ப்செட் சந்தை எதிர்பார்த்த அளவு வளர்ச்சியடையவில்லை. வீட்டு பயன்பாட்டுக்கான பம்ப்செட் விற்பனை அதிகரிக்கவில்லை.

விவசாய தேவைக்கான பம்ப்செட் விற்பனை மட்டும் ஓரளவு அதிகரித்துள்ளது. இருப்பினும் தேசிய அளவில் பம்ப்செட் சந்தையில் தொடர்ந்து மந்தநிலை தான் காணப்படுகிறது. வீட்டு பயன்பாட்டு தேவைக்கான பம்ப்செட் விற்பனை அதிகரிக்காததற்கான காரணத்தை யூகிக்க முடியவில்லை. இருப்பினும் பொருளாதார நெருக்கடி காரணமாக இருக்கலாம்.

புதிய பம்ப்செட் வாங்குவதை மக்கள் சிறிது காலம் ஒத்திவைத்து பழைய பம்ப்செட் பழுது ஏற்பட்டால் அதை சரிசெய்து மீண்டும் பயன்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். பம்ப்செட் பழுதுபார்க்கும் சந்தையில் காணப்படும் வளர்ச்சி இதற்கு சான்றாகும். தீபாவளிக்கு பின் விவசாய பயன்பாட்டுக்கான பம்ப்செட் தேவை தேசிய அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,” என்றார்.

தென்னிந்திய பொறியியல் பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (சீமா) தலைவர் விக்னேஷ் கூறும்போது, ‘‘விவசாய பயன்பாட்டுக்கான பம்ப்செட் தேவை மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது. நிலைமை எவ்வாறு இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

வீட்டு தேவைக்கான பம்ப்செட் விற்பனை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால் கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் உதிரிபாகங்கள் உற்பத்தி நிறுவனங்களில் 30 சதவீதம் மூடப்பட்டு விட்டன. பம்ப்செட் பணிஆணைகள் அதிகரிக்க தொடங்கும்போது தான் மூடப்பட்ட நிறுவனங்களால் ஏற்படும் தாக்கம் தெரியவரும்’’என்றார்.

கோவை பம்ப்செட் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (கோப்மா) தலைவர் மணிராஜ் கூறும்போது, ‘‘பம்ப்செட் தொழிலில் கோவைக்கு போட்டியாக குஜராத் மாநிலம் உருவெடுத்து மிக சிறந்த வளர்ச்சியை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. உற்பத்திக்கு தேவையான முக்கிய மூலப் பொருட்கள் பெரும்பாலும் குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுவதே காரணம்.

பம்ப்செட் தொழிலில் தொடரும் மந்த நிலையால் குறு, சிறு பம்ப்செட் உற்பத்தியாளர்கள் வங்கியில் வாங்கிய கடனுக்கு வட்டியை கூட திருப்பி செலுத்த முடியாத அவல நிலை உள்ளது. குஜராத் பம்ப்செட் விலை குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. தரம் குறைவாக உள்ள காரணத்தால் உத்தரவாதம் இல்லை என்று வெளிப் படையாக தெரிவிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x