Published : 25 Oct 2023 04:46 PM
Last Updated : 25 Oct 2023 04:46 PM
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் 1,672 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இயற்கை எழில்சூழ்ந்த மாவட்டமாகும். தென்னை, ரப்பர், அன்னாசிபழம், வாழை, பாக்கு, மரச்சீனி, பலா, தேன், கிராம்பு உள்ளிட்ட பல்வேறு விளைபொருட்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. சுற்றுச்சூழல் சார்ந்த இயற்கை பொருளாதாரத்தை இங்கு ஏற்படுத்த இயலும். இயற்கை தரும் உற்பத்தி பொருட்களைக் கொண்டு மாவட்டத்தில் பல தொழில் முனைவோரை ஏற்படுத்த முடியும். இதனால் பல லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெறுவர்.
இதுபோல் 72 கி.மீ. நீளமுள்ள இம்மாவட்ட கடற்கரை, 42 மீனவ கிராமங்களைக் கொண்டுள்ளது. 4 மீன்பிடித் துறைமுகங்கள் உள்ளன. அந்நியச் செலவாணியை ஈட்டித்தரும் வகையில் மீன்பிடி தொழிலும், மீன் வர்த்தகமும் பெரிய அளவில் நடந்து வருகிறது. கடல் வளம் அதிகமாக இருந்த போதிலும் அதனைச் சார்ந்த தொழில்களை வளர்த்தெடுக்க எவ்வித முயற்சியும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
செண்பகராமன்புதூரில் தென்னை சார் தொழில் மையம் உள்ளது. முத்தலக்குறிச்சி கிராமத்தில் வாழை மதிப்புக் கூட்டுதல் மையம் அமைக்கப்பட்டு உள்ளது. வாழைக்காய் சிப்ஸ்அலகு சோதனை ஓட்டம் முடிக்கப்பட்ட நிலையில் வாழைக்காய் பவுடர் அலகு இன்னும் இரு மாதங்களில் செயல்பாட்டுக்கு வர உள்ளது. ரப்பர் சார் தொழில்களுக்கான மையம் குலசேகரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் உள்ளது. தேன் பதப்படுத்துதல் மையம் முத்தலக்குறிச்சியில் உள்ளது.
ஆனால் மூலிகைகள், பலா மற்றும் மீன் தொடர்பான தொழில் மையங்கள் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. இத்தகைய தொழில் மையங்களை ஏற்படுத்துவதின் மூலமாக சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பொருட்களை உற்பத்தி செய்து, கிராம பொருளாதாரத்தை உயர்த்தி, கிராமங்களை தன்னிறைவு பெறச் செய்யலாம்.
எனவே ரப்பர், மூலிகைகள், தென்னை, பலா, மீன் சார்ந்த தொழில் மையங்களை குமரி மாவட்டத்தில் உருவாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இங்குள்ள மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT