Published : 17 Oct 2023 03:56 PM
Last Updated : 17 Oct 2023 03:56 PM
சிவகங்கை: சிவகங்கை அருகே இடைய மேலூரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் இயற்கை விவசாயத்தில் அத்திப் பழம் சாகுபடி செய்து அசத்தியுள்ளார். அத்திப்பழம் ஹீமோகுளோபினை அதிகரிக் கும், மலச்சிக்கல் பிரச்சினையைத் தீர்க்கும் நார்ச்சத்து மிகுந்த பழம். இது வறட்சியைத் தாங்கி வளரக் கூடியது. இதை இடையமேலூரைச் சேர்ந்த அரசு என்பவர் தனது 60 சென்ட் நிலத்தில் சாகுபடி செய்துள்ளார். அதில் 224 அத்திப்பழ மரங்கள் வைத்துள்ளார்.
தினமும் 10 கிலோ வரை பறித்து விற்பனை செய்து வருகிறார். 300 முதல் 350 கிராம் வரை ரூ.100-க்கு விற்பனை செய்கிறார். இயற்கை முறையில் விளைவித்த பழம் என்பதால் சிவகங்கை மாவட்டம் முழுவதும் இப்பழத்துக்கு மவுசு உள்ளது.
இதுகுறித்து விவசாயி அரசு கூறியதாவது: தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து 4 ஆண்டுகளுக்கு முன்பு அத்திப்பழ மரக்கன்றுளை வாங்கி வந்து நடவு செய்தேன். பத்துக்கு பத்து அடி இடைவெளியில் ஒன்றரை அடி ஆழம், ஓரடி நீளம், ஓரடி அகலத்தில் நடவு செய்தேன். 7 மாதங்களில் இருந்து பலன் கிடைக்கிறது.
ஆண்டுக்கு ஒருமுறை மழைக் காலங்களில் கவாத்து செய்வேன். அப்போதுதான் இலைகள் அதிகளவில் உருவாகும். ஓர் இலைக்கு ஒரு பழம் காய்க்கும் என்பதால் கவாத்து முக்கியமாகச் செய்ய வேண்டும்.
`டர்கீப் பிரவுன்' ரகம் சிறிதாக இருந்தாலும் சுவையாக இருக்கும். அதனால் அனைவரும் விரும்பி வாங்குகின்றனர். இந்தப் பழ மரத்துக்கு சாண எரு, மண்புழு உரங்கள் போன்ற இயற்கை உரங்களைப் பயன்படுத்துகிறேன்.
இதனால் இதுவரை பூச்சி, நோய் தாக்குதல் இல்லை. அத்தி இலை களை ஆடு, மாடுகள் மேயாது. இதனால் இங்கு ஆடு, மாடுகளையும் வளர்க் கலாம். அதன்மூலம் களை எடுக்கத் தேவை இருக்காது. அத்திச் செடி அனைத்து மண் வகைகளிலும் வளரும். முறையாகப் பராமரித்தால் 15 முதல் 20 ஆண்டுகள் வரை காய்க்கும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT