Published : 14 Oct 2023 06:34 PM
Last Updated : 14 Oct 2023 06:34 PM

தமிழகத்தில் இருந்து இந்தியா - இலங்கை இடையே பயணிகள் கப்பல் - பயன்களை பட்டியலிட்ட வெளியுறவு அமைச்சர்

புதுடெல்லி: “தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கி இருப்பது, மக்களிடையே தொடர்புகளை வளர்ப்பதற்கான மிகப் பெரிய நடவடிக்கை” என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

நாகை - இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து குறித்து பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “இந்த கப்பல் போக்குவரத்து இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள மக்களை இணைப்பதற்கான மிகப் பெரிய நடவடிக்கையாகும். இதனை இந்திய பிரதமர் மோடி மற்றும் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இருவரும் அங்கீகரித்துள்ளனர். எதிர்காலத்தில் நாங்கள் குழாய் இணைப்பு, பொருளாதார வழித்தடம் போன்றவற்றை ஏற்படுத்தப் பார்க்கிறோம். இலங்கையில் உள்ள அனைவரும் ஒரே கண்ணியத்துடன் சமமான உரிமைகளுடன் வாழ்வதற்கு ஆதரவு அளிக்கப்படும்.

இந்தியா அதன் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமைக் கொள்கை, அண்டை நாடுகளுடன் உறவு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இந்த கப்பல் போக்குவரத்தின் மூலமாக அதனையே வலியுறுத்த விருப்புகிறோம். இது பிரதமர் மோடி ஏற்கெனவே ஒப்புதல் அளித்த சென்னை - யாழ்ப்பாணம் இடையேயான விமான சேவையிலேயே வெளிப்பட்டது.

தமிழகத்துக்கு எப்போதும் தனது இதயத்தில் இடம் வைத்திருக்கும், இலங்கையில் உள்ள அனைத்து மக்களின் நலன்களில் அக்கறை கொண்டிருக்கும் பிரதமரின் இயல்பான முடிவு இவை. யாழ்ப்பாணத்துக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் மோடிதான் என்பதை யார்தான் மறுக்க முடியும். அவரின் இந்த அர்ப்பணிப்பை இலங்கையிலுள்ள வீட்டுத் திட்டங்கள், கலச்சார மையங்கள் மற்றும் மருத்துவமனைகள் ஆகியவற்றுக்கான உறுதுணைகளிலும் காணமுடியும்.

இந்தக் கப்பல் போக்குவரத்து, மக்கள் ஒருவரை மற்றவருடன் கடல்வழியாக இணைக்கும் முக்கியமான ஒன்றாகும். மேலும். காங்கேகசன்துறையின் சுமுகமான செயல்பாட்டுக்கு நமது உதவிகளையும் அடிக்கோடிட்டுக் காட்டும். இன்று கப்பல் போக்குவரத்து, முன்பு விமான சேவை, எளிதான விசா நடைமுறை, அதிகமான சுற்றுலா போன்றவை பொதுமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகின்றன. இறுதியாக, மோடி அரசின் வணிக அர்ப்பணிப்புகளை இது எளிதாக்கும். இந்த கப்பல் போக்குவரத்து மூலம் நேரடியாக சரக்குகளைக் கொண்டு செல்வதை எளிதாக்கும் நீங்கள் எல்லோரும் கேட்டதுபோல் குறிப்பாக சிறு வணிகர்களுக்கு உதவியாக இருக்கும்" என்று அமைச்சர் தெரிவித்தார்.

முன்னதாக, தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு இன்று (அக்.14) பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கியது. நாகை துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில், பிரதமர் மோடி காணொலி வாயிலாக பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்கிவைத்தார். நாகப்பட்டினத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் பங்கேற்று கொடியசைத்து கப்பல் சேவையை தொடங்கிவைத்தனர்.

கப்பல் சேவையை தொடக்கிவைத்துப் பேசிய பிரதமர் மோடி ஆங்கிலம், சிங்களம், தமிழ் என மூன்று மொழிகளிலும் வணக்கம் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "இந்தியா - இலங்கை இடையே தூதரக, பொருளாதார உறவுகளில் புதிய அத்தியாயத்தை எழுதுகிறோம். இந்தச் சூழலில் இலங்கை காங்கேகசன்துறை - இந்தியாவின் நாகப்பட்டினம் இடையேயான கப்பல் போக்குவரத்து இருநாட்டு உறவையும் வலுப்படுத்துவதில் மிக முக்கியமான மைல்கல். இந்தியா - இலங்கை பயணிகள் கப்பல் சேவையானது போக்குவரத்து தொடர்பை மேம்படுத்துவதோடு வர்த்தகத்தையும் வளர்க்கும். இருநாடுகளுக்கும் இடையேயான நீண்ட கால உறவை வலுப்படுத்தும்" என்று கூறினார்.

கட்டணம் எவ்வளவு? - நாகையிலிருந்து காங்கேசன்துரைக்குச் செல்ல ரூ.7,670 கட்டணமாகும். இக்கட்டணம் ஜிஎஸ்டி வரி உட்பட ரூ.7.670 ஆகும். 150 பயணிகள் வரை பயணம் மேற்கொள்ளும் வசதியுள்ள இந்த கப்பலில் இன்று 50 பயணிகள் இலங்கைக்குப் புறப்பட்டனர்.

பயண நேரம்: நாகையில் இருந்து 60 நாட்டிக்கல் மைல் தொலைவில் உள்ள இலங்கை காங்கேசன்துறையை இந்தக் கப்பல் 3.30 மணி நேரத்தில் சென்றடையும். இந்தக் கப்பல் நாகையில் இருந்து இலங்கைக்கும், இலங்கையில் இருந்து நாகைக்கும் தினமும் தலா ஒருமுறை இயக்கப்படும். இந்தக் கப்பல் பயணத்தின்போது பயணிகள் அதிகபட்சம் 52 கிலோ எடை கொண்ட உடைமைகளை எடுத்துச் செல்ல முடியும்.

இந்தப் பயணிகள் கப்பல் அன்றாடம் காலை 7 மணிக்கு நாகையில் இருந்து புறப்படும். பகல் 12 மணிக்கு இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பகல் 12 மணிக்குச் சென்றடையும். அங்கிருந்து பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு நாகை வந்தடையும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x