Published : 12 Oct 2023 04:08 AM
Last Updated : 12 Oct 2023 04:08 AM
பழநி: தமிழகத்தில் பட்டு விவசாயிகளுக்கான காப்பீடு பிரீமியம் தொகை ரூ.799 ஆக அதிகரித்துள்ள நிலையில், இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்காதது ஏமாற்றம் அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் பட்டுக்கூடு உற்பத்தி தொழிலில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ல் வளர்ச்சி அடைந்து வருகிறது. மாநிலம் முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பட்டுப்புழு வளர்ப்பு மனைகள் அமைத்து, வெண் பட்டுக்கூடு உற்பத்தி செய்து வருகின்றனர். பட்டு புழுவிற்கு உணவான மல்பெரி 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
இளம் புழுக்கள் மற்றும் தரம் இல்லாத முட்டைகளால் பாதிப்பு, புழு வளர்ப்பு மனை சேதம் ஏற்படுதல், இத்தொழிலில் ஈடுபடும் விவசாயிகளுக்கு விபத்து ஏற்படும்போது அவர்களை பாதுகாக்க பட்டு வளர்ச்சித் துறையின் மூலமாக பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகளுக்கான பிரீமியம் தொகை ரூ.179-ஐ அரசே செலுத்தி வந்தது.
அதன்படி புழு வளர்ப்பு தோல்வி அடைந்தால் ரூ.10 ஆயிரம், புழு வளர்ப்பு மனை சேதம் அடைந்தால் ரூ.2 லட்சம், விவசாயிகள் விபத்தினால் உயிரிழந்தால் ரூ.2 லட்சம், விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டது. இந்நிலையில் 2023-24-ம் ஆண்டுக்கான காப்பீடுக்கு விவசாயிகளின் பங்களிப்பு தொகையாக ரூ.290 வசூலிக்கப்படுகிறது.
மேலும் அரசு சார்பில் ஒவ்வொரு விவசாயிக்கும் ரூ.509 வீதம் மொத்தம் ரூ.799 பிரீமியம் தொகை செலுத்தப்படுகிறது. தற்போது வரை 9,177 விவசாயிகளுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ரூ.179 பிரீமியமாக செலுத்திய போது வழங்கப்பட்ட, அதே இழப்பீடு தொகையே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இது குறித்து பழநி பகுதியைச் சேர்ந்த பட்டுப்புழு வளர்ப்பு விவசாயி செல்வராஜ் கூறியதாவது: கடந்த ஆண்டுளில் காப்பீடு பிரீமியம் தொகை ரூ.179-ஐ 22,569 விவசாயிகளுக்கு அரசே செலுத்தியது. நடப்பாண்டில் பிரீமியம் தொகை உயர்த்தப்பட்டதோடு, விவசாயிகளின் பங்களிப்பாக ரூ.290 வசூலிக்கப்படுகிறது. மொத்தம் 11,697 விவசாயிகள் கணக்கெடுக்கப்பட்டு 9,177 பேருக்கு மட்டுமே காப்பீடு செலுத்தப்பட்டுள்ளது.
பட்டு விவசாயிகள் கணக்கெடுப்பில் முரண்பாடு உள்ளது. மேலும் ரூ.179-க்கு வழங்கப்பட்ட அதே இழப்பீட்டுத் தொகையை, தற்போது அதிகரிக்கப்பட்ட காப்பீடு பிரீமியம் ரூ.799-க்கும் வழங்கப்படுகிறது. பிரீமியம் கட்டணத்தை அதிகரித்ததுபோல் இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்காதது ஏமாற்றத்தை அளிக்கிறது. எனவே, இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT