Published : 02 Jan 2018 11:39 AM
Last Updated : 02 Jan 2018 11:39 AM

ஆன்லைன் ராஜா 08: சூப்பர் வாத்தியார்

ஸ்டீஃபன் உதவியால், ஜாக் மாவின் காதல் வெற்றி. கென் மார்லி இன்னொரு பிரச்சினையையும் தீர்த்துவைத்தார். அவன் வீட்டுக்கு வந்துபோனதால், அவருக்குக் குடும்பத்தின் ஏழ்மை புரிந்தது. கல்லூரியில் படிப்புக் கட்டணம் இல்லாதபோதும், ஹாஸ்டல் ஃபீஸ் வாரம் பத்து டாலர். சிறிய தொகைதான். ஆனால், இதைக் கட்டக்கூட அவர்களால் முடியவில்லை. கென் மார்லி இந்தப் பணத்தை அவனுக்கு அனுப்பத் தொடங்கினார். கவலைகள் தீர்ந்த ஜாக் மாவின் கவனம் படிப்பிலும், யூனியன் வேலைகளிலும்.

ஜாக் மாவின் தலைமைப் பண்புகள் ஜொலிக்கத் தொடங்கின. சிறந்த 10 பாடகர் / பாடகிகளைத் தேர்ந்தெடுக்கும் இசைப்போட்டி நடத்தினான். சூப்பர் டூப்பர் சக்ஸஸ். அரசு அனுமதி வாங்குதல், போட்டியாளர் பங்கேற்பு, நடுவர்கள் நியமனம், போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள், நிதி நிர்வாகம், நிகழ்ச்சி நடத்துதல் என ஒவ்வொரு அம்சமும் கன கச்சிதம். இவனுக்குள் இத்தனை நிர்வாகத் திறமை இருக்கிறதா என நண்பர்களையே வியக்கவைத்தது. தான் படித்த ஆசிரியர் பயிற்சி நிலையத்தையும் தாண்டி, பல்கலைக் கழகம் முழுக்க அறிந்த பெயராகிவிட்டான்.

கல்லூரியில் மூன்றாம் வருடம். படிப்பின் இறுதி வருடம். ஹாங்ஸெள பல்கலைக் கழக மாணவர் யூனியன் தலைவர் தேர்தல். பல்கலைக் கழகத்தில் இருக்கும் அனைத்துக் கல்லூரிகளின் மாணவர்களுக்கும் தலைமை வகிக்கும் பதவி. ஜாக் மா போட்டியிட்டான். போன இடமெல்லாம் அவனுக்கு நண்பர்கள். வெற்றிக்கனி சுலபமாக அவன் கையில் விழுந்தது.

பல்கலைக் கழகத் துணை வேந்தர், உயர் அதிகாரிகள், கல்லூரி முதல்வர்கள் ஆகிய எல்லோருக்கும் ஜாக் மாவைப் பிடிக்கும். படிப்பில் முதல் மாணவன், பழகுவதற்கு இனியவன், மாணவ சமுதாயத்தின் ஆதரவு பெற்றவன் என்னும் பல காரணங்கள். இப்போது வந்தது ஒரு பிரச்சினை. ஒரு மாணவன் ஏதோ தவறு செய்துவிட்டான். அவன் தேர்வு எழுதக்கூடாது என்று பல்கலைக் கழகம் முடிவெடுத்தது. அவன் யூனியனிடம் முறையிட்டான். அதிகார வர்க்கத்தோடு மோதினால் தங்களைப் பாதிக்குமோ, ஏன் வம்பு என்று செயற்குழு உறுப்பினர்கள் தயங்கினார்கள். ஜாக் மா குணத்தில் சாது. எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்க ஆசைப்படுபவன். ஆகவே, கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாகிவிடுவான் என்று எல்லோரும் நினைத்தார்கள்.

தேர்வு எழுதாவிட்டால் அந்த மாணவனின் ஒரு வருடம் வீணாகும் என்பதை ஜாக் மா உணர்ந்தான். அவன் சண்டை போடுவதே தனிப் பாணி. கோபப்படமாட்டான். கடும் சொற்கள் வராது. நயமாகப் பேசி அடுத்தவரைத் தன் பக்கம் இழுப்பான். அந்த மாணவன் படித்த கல்லூரி முதல்வரோடும், பேராசிரியர்களோடும் பேசினான். மாணவன் செய்தது தவறுதான். ஆனால், தேர்வு எழுத மறுப்பது பெரிய தண்டனை, அவன் வாழ்க்கையைப் பாதிக்கும் என்று வாதாடினான். நியாயத்தைப் புரிந்துகொண்டார்கள். மாணவன் தேர்வு எழுதினான், வெற்றிகரமாகப் படிப்பை முடித்தான். ஜாக் மா நியாயத்துக்குப் போராடுபவன் என்பது வெளிச்சமானது.

பத்து ஆண்டுகளுக்குப் பின்…..ஜாக் மா, ஷென்ஸென் (Shenzhen) என்னும் ஊருக்குப் போயிருந்தான். அங்கே அவனுக்கு ஒரு சிக்கல். அப்போது அந்த இளைஞன் தானாகவே வந்து சந்தித்தான். ஜாக் மாவின் கையை அழுத்தமாகப் பிடித்துக்கொண்டான். சொன்னான், ``நீ வந்திருக்கிறாய் என்று கேள்விப்பட்டு உன்னைப் பார்க்க ஓடோடி வந்திருக்கிறேன். எனக்கு இந்த ஊரில் நிறையப் பேரைத் தெரியும். என்ன பிரச்சினை இருந்தாலும் சொல். தீர்த்துவைக்கிறேன்.”

அவன் சொன்னதைச் செய்தான். இதேபோல் ஜா மாவுக்குக் கேட்காமலே உதவி செய்யும் நண்பர்கள் ஏராளம்.

1988. கல்லூரிப் படிப்பு முடிந்தது. ``பசுமை நிறைந்த நினைவுகளே, பாடித் திரிந்த பறவைகளே, பழகிக் களித்த தோழர்களே, பறந்து செல்கின்றோம்” என்று கனத்த நெஞ்சோடு விடை பெற்றார்கள். ``உடனேயே வேலை கிடைக்கும். அம்மாவும், அப்பாவும் மகிழ்ச்சிக் கடலில் மிதப்பார்கள். காத்தியுடன் திருமணம்” என்று மனம் நிறைய வண்ணக் கனவுகள், ஆனால், போட்டிகளும், தோல்விகளும் கொண்ட நடைமுறை வாழ்க்கை நிதர்சனம் புரியத் தொடங்கியது.

போலீஸ் வேலைக்கு அப்ளை பண்ணினான். அவன் உயரம் ஐந்து அடிக்கு ஓரிரு அங்குலங்கள் அதிகம் மட்டுமே. உயரம் போதாதென்று நிராகரித்தார்கள். ஹாங்ஸெள நகரத்தில் கே.எஃப்.சி. (KFC) கடை திறந்தார்கள். சேல்ஸ்மேன் வேலைக்கு ஆட்கள் எடுத்தார்கள். ஆங்கிலத்தில் உரையாடும் திறமையால், தனக்கு வேலை நி்ச்சயம் என்று உறுதியாக இருந்தான். 24 பேர் இன்டர்வியூவுக்கு வந்தார்கள். 23 பேருக்கு வேலை கிடைத்தது, வெறும் கையோடு திரும்பியவன் ஜாக் மா மட்டும்தான். இப்படி 30 வேலை தேடும் முயற்சிகள். அத்தனையும் தோல்வி.

மனம் உடைந்துபோனானா? இல்லை. காரணம்? பிற்காலத்தில் அவன் விளக்கிய சொந்தச் சித்தாந்தம், ``எப்போதும் முயற்சியைக் கைவிடாதீர்கள். இன்றைய நாள் கடினமானது. நாளை, இதைவிடக் கடினமாக இருக்கும். ஆனால், நாளை மறுநாள் நிச்சயமாகக் கிழக்கு வெளுக்கும், முயற்சிகளைக் கைவிட்டால், இந்த மகிழ்ச்சியைச் சந்திக்கவே முடியாது.”

தொடர்ந்து வேலை தேடினான். ஹாங்ஸெள எலெக்ட்ரானிக் எஞ்சினீரிங் இன்ஸ்டிடியூட்டில் ஆங்கில ஆசிரியர் வேலை கிடைத்தது.

*கல்லூரி ஆசிரியரை ‘‘அவன்’’ என்று சொல்வது அவமரியாதை. ஆகவே, இனி ‘‘அவர்’’

தேடிய பிற வேலைகளைவிட இந்த வேலையில் சம்பளம் குறைவு. ஜாக் மா குணம் தனிக்குணம். எவரெஸ்ட் ஏற ஆசைப்படுவார். பரங்கிமலை உச்சியைத்தான் அடைய முடிந்ததென்றால், குறைசொல்லிப் புலம்பமாட்டார். கிடைத்ததை அனுபவிப்பார். அடுத்ததாக என்ன செய்யலாமென்று யோசிப்பார்.

ஆங்கில ஆசிரியர் வேலையில் கிடைத்த சம்பளம் போதவில்லை. Young Mens’ Christian Association (YMCA) என்னும் அமைப்பில் ஆங்கிலம், பன்னாட்டு வாணிபம் ஆகியவற்றுக்கு மாலைநேர வகுப்புகள் நடத்தினார்கள். இங்கே பகுதிநேர ஆசிரியராகச் சேர்ந்தார். இளைஞர்கள், முதியவர்கள், கல்லூரி மாணவர்கள், அனுபவசாலிகள் சிறு பிசினஸ்மேன்கள், தொழிலாளிகள், ஆண்கள், பெண்கள் என வகுப்பில் பலதரப்பட்டோர். முதல் நாள். வகுப்பில் எல்லா மாணவ மாணவிகளும் இருக்கைகளில் அமர்ந்துவிட்டார்கள். ஆசிரியர் வரவில்லை. நேரம் வீணாகிறது என்று கோபம்.

அப்போது ஜாக் மா வேர்க்க விறுவிறுக்கச் சைக்கிளை ஓட்டியபடி வந்தார். வரும் வழியில் போக்குவரத்து நெரிசல். தாமதமாகிவிட்டது. சைக்கிளை நிறுத்தினார். வகுப்புக்குள் ஓடோடி வந்தார். குள்ள உருவம். ஒல்லி உடல். சின்னப் பையன் போல் முகம், அவரை ஆசிரியர் என்றே யாரும் நினைக்கவில்லை. சக மாணவன் என்று நினைத்தார்கள். போர்ட் அருகே போனார். பெருமூச்சு வாங்கியபடியே பேசினார்.

“நான் தான் உங்கள் ஆசிரியர் ஜாக் மா. இன்றைய பாடம் தாமதமாக வருதல். தாமதமாக வருவது எனக்குப் பிடிக்காது. ஏனென்றால், அது தனக்காகக் காத்திருப்பவர்களுக்குச் செய்யும் அவமரியாதை. பணத்தைவிட விலை மதிப்பான அவர்கள் நேரத்தைக் கொல்வது. ”

மாணவர்கள் கோபம் மறைந்தது. சிரித்தார்கள். இதுவரை, சீரியசான ஆசிரியர்களைத்தான் சந்தித்திருக்கிறார்கள். கோமாளித்தனம் செய்பவரைப் பார்த்ததும், ஆச்சரியம், அதே சமயம், இவரிடம் படித்து உருப்பட்ட மாதிரித்தான் என்னும் அவநம்பிக்கை.

மற்ற ஆசிரியர்கள் குண்டுப் புத்தகங்கள் கொண்டுவருவார்கள். பக்கம் பக்கமாக வாசிப்பார்கள். அதிலும், ஆங்கில ஆசிரியர்கள் ரென் அன்ட் மார்ட்டின் (Wren & Martin) இலக்கணப் புத்தகத்தில் தாங்கள் உருப்போட்டதை ஒப்பிப்பார்கள். வகுப்பு முடியும்போது, பாதிப்பேரைத் தூக்கத்திலிருந்து எழுப்பவேண்டும். ஜாக் மா கையில் புத்தகம் ஒன்றுகூட இல்லை. ஏன்? துண்டுக் காகிதம்கூட இல்லை. அவநம்பிக்கை அதிகமானது.

ஜாக் மா காலம் தவறாமை பற்றிய ஒவ்வொருவரின் அனுபவத்தையும் ஆங்கிலத்தில் விவரிக்கச் சொன்னார். முழுக்க ஆங்கிலத்தில் சொல்ல முடியவில்லையா? சீங்கிளீஷ். நடு நடுவே அவர் சொல்லும் ஜோக்ஸ், குட்டிக் கதைகள். வகுப்பு முடிந்தபோது தாங்கள் உணராமலே, வழக்கத்தைவிட அதிகமான ஆங்கில வார்த்தைகள் அவர்கள் மனங்களில் பதிந்திருந்தன.

வகுப்பு முடிந்தவுடன் ஓடிப்போகும் ஆசிரியர்களைத்தான் YMCA மாணவர்கள் இதுவரை சந்தித்திருந்தார்கள். ஜாக் மா சாவகாசமாகச் சந்தேகங்களைத் தீர்த்துவைத்தார். அவர்களோடு வம்படித்தார், டீ குடித்தார். அவர்கள் வீடுகளுக்குப் போய்ச் சீட்டு விளையாடினார். ஜாக் மாவுக்குக் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். மாணவர்களோடு, அருகிலிருந்த குழந்தைகள் பூங்காவுக்குப் போவார். குழந்தைகளோடு குழந்தைகளாக விளையாடுவார்கள். இது மட்டுமா? வகுப்பில் ஒரு மாணவனுக்கும், மாணவிக்குமிடையே காதல் அரும்பியது. அவர்கள் பெற்றோரிடம் பேசிக் காதல் கனிந்து கல்யாணமாக உதவினார்.

மாணவர்களின் ஒட்டுமொத்த அபிப்பிராயம் – ஜாக் மா அபாரத் திறமை கொண்ட ஆங்கில ஆசிரியர் மட்டுமல்ல, அற்புதமான மனிதர்.

(குகை இன்னும் திறக்கும்)

slvmoorthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x