Published : 13 Dec 2017 11:02 AM
Last Updated : 13 Dec 2017 11:02 AM
இந்தியாவில் பஞ்சு சீசன் தொடங்கியுள்ள நிலையில், தரம் குறைந்த பஞ்சு வரவால் நூற்பாலைகளின் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது. மேலும், கடந்த ஒரு வாரத்தில் ஒரு கண்டி பஞ்சு விலை ரூ.1,500 அதிகரித்துள்ளதால் தமிழக நூற்பாலைகள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.
இந்தியாவில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக பெரிய துறையாகத் திகழ்வது ஜவளித் துறை. ஒவ்வோர் ஆண்டும் சுமார் 3.75 கோடி பேல் பஞ்சு தேவைப்படுகிறது. தமிழகத்துக்கு மட்டும் ஆண்டுக்கு ஒரு கோடி பேல் பஞ்சு தேவைப்படுகிறது.
எனினும், தமிழகத்தில் சுமார் 6 லட்சம் பேல் பஞ்சு மட்டுமே உற்பத்தியாகிறது. 90 சதவீதம் மகாராஷ்டிரா, தெலங்கானா, குஜராத், கர்நாடக மாநிலங்களில் உற்பத்தியாகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் முதல் மே மாதம் வரை பஞ்சு சீசன் இருக்கும். வழக்கமாக மார்ச் மாதத்துக்குப் பிறகு விலையில் ஏற்ற, இறக்கங்கள் இருக்கும்.
நடப்பாண்டு பல்வேறு மாநிலங்களிலும் பருத்தி பயிரிடும் பரப்பு அதிகரித்ததால், பஞ்சு உற்பத்தியும் நன்றாக இருந்தது. ஆனால், எதிர்பாராத மழை, பூச்சித் தாக்குதல் உள்ளிட்டவற்றால் பஞ்சின் தரம் குறைந்துவிட்டது. கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பாண்டு சந்தைக்கு வரும் பஞ்சு தரம் மிகவும் குறைவாக உள்ளதாக நூல் உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அதேபோல, நூல் விலையும் கடந்த ஒரு வாரத்தில் அதிகரித்துவிட்டது.
இதுகுறித்து இந்திய ஜவுளித் தொழில்முனைவோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் 'தி இந்து'விடம் கூறியதாவது: நாட்டில் உள்ள 5.5 கோடி கதிர்களில் (ஸ்பிண்டில்) 40 சதவீதம், அதாவது 2 கோடிக்கும் மேற்பட்ட கதிர்கள் தமிழகத்தில்தான் உள்ளன.
கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், நாமக்கல், சேலம், விருதுநகர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் 1,200-க்கும் மேற்பட்ட நூற்பாலைகளில், சுமார் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான நூல் தயாரிக்கப்பட்டு, தமிழகம் மட்டுமின்றி, வட மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் அனுப்பிவைக்கப்படுகின்றன.
அக்டோபர் முதல் வாரத்திலிருந்தே சந்தைக்கு வரும் பஞ்சின் தரம் மிகவும் குறைவாக உள்ளது. இந்த பஞ்சைக் கொண்டு நூலைத் தயாரிக்க கூடுதல் ஆட்கள், தரம் பிரிக்கும் இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. கழிவுப் பஞ்சு விகிதமும் அதிகமாக உள்ளது. இதனால் உற்பத்தி செலவு 3 சதவீதத்துக்குமேல் அதிகரித்துள்ளது. இதையே காரணமாகக் கொண்டு பஞ்சின் விலையையும் யூக வணிகர்கள் அதிகரித்துவிட்டனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே பஞ்சு விலை ரூ.1,500 அதிகரித்துவிட்டது. கடந்த வாரம் நூற்பாலைகளுக்கு வந்த ஒரு கண்டி (170 கிலோ) பஞ்சு ரூ.39,000-க்கு விற்ற நிலையில், தற்போது ரூ.40,500 முதல் ரூ.40,700-க்கு விற்கப்படுகிறது.
பஞ்சு விலை அதிகரிப்பு, உற்பத்தி செலவு அதிகரிப்பு உள்ளிட்டவற்றால் நூல் விலையையும் 3 முதல் 4 சதவீதம் வரை உயர்த்த வேண்டிய நிலைக்கு நூற்பாலைகள் தள்ளப்பட்டுள்ளன. 40-எஸ் கார்டட் வார்ப் ரக நூல் ரூ.208-லிருந்து ரூ.216-ஆக உயர்ந்துள்ளது. இதேபோல, பல்வேறு ரக நூல்களின் விலையும் உயர்ந்துள்ளது. வழக்கமாக ஹொசைரி ரக நூல்களுக்கு நூற்பாலைகளால் வழங்கப்பட்ட தள்ளுபடியும் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
இன்னும் அதிக அளவில் பஞ்சு பேல்கள் வரவுள்ள நிலையில், சீசன் தொடக்கத்திலேயே விலை உயர்ந்துள்ளது நூற்பாலை உரிமையாளர்களை கவலைக்குள்ளாகியுள்ளது. இதன் தாக்கம் நூல் உற்பத்தி மற்றும் ஜவுளி உற்பத்தியிலும் எதிரொலிக்கும். சர்வதேச அளவில் சீனாவுடன் போட்டியை எதிர்நோக்கியுள்ள இந்திய ஜவுளித் துறைக்கு, இந்தப் பிரச்சினைகள் கொஞ்சம் நெருக்கடியை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT