Published : 10 Oct 2023 04:08 AM
Last Updated : 10 Oct 2023 04:08 AM
கடலூர்: நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் ராஜஸ்தான் ராஜ்ய வித்யுத் நிகாம் நிறுவனத்திலிருந்து 810 மெகாவாட் சூரிய ஒளி மின்னழுத்த மின் திட்டத்துக்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.
ராஜஸ்தான், பிகானேர் மாவட்டம் புகல் தாலுகாவில்உள்ள ராஜஸ்தான் ராஜ்ய வித்யுத் நிகாம் நிறுவனத்தின் 2,000 மெகாவாட் அல்ட்ரா மெகா சூரிய ஒளி பூங்காவின் மேம்பாட்டுக்காக 21.12.2022 அன்று ராஜஸ்தான் ராஜ்ய வித்யுத் நிகாம் நிறுவனம் நடத்திய 810 மெகா வாட் மின் திறனுக்கான ஒப்பந்தத்தை என்எல்சி நிறுவனம் பெற்றுள்ளது.
இத்திட்டத்துக்கான நிலம் மற்றும் மாநில பகிர்மான சேவையுடன் இணைக்கப்பட்ட மின் வெளியேற்ற அமைப்பு ராஜ்ய வித்யுத் நிகாம் நிறுவனத்தால் வழங்கப்படும். இத்திட்டத்தின் வாயிலாக ராஜஸ்தான் மாநில மின் உற்பத்தித் திறன் 1.36 ஜிகா வாட் ஆக உயர்வதுடன் 1.1 ஜிகா வாட் பசுமை மின்சாரம் உட்பட மின் உற்பத்திக்கான நிலையான செலவுகள் குறைக்கப்பட்டு சிக்கனம் மேம்படும்.
இதன் விளைவாக 5000 கோடி யூனிட்டுகளுக்கும் அதிகமான பசுமை மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் மற்றும் திட்ட ஆயுட்காலம் வரை 50,000 டன்களுக்கு மேல் கரியமில வாயு வெளியேற்றம் குறையும்.
இது தொடர்பாக என்எல்சி தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் பிரசன்ன குமார் கூறுகையில், “இந்தியாவில் ஒரு ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை நிறுவிய முதல் மத்திய பொதுத்துறை நிறுவனம் என்எல்சி இந்தியா நிறுவனம். இந்நிறுவனம் தற்போது இந்தியா முழுவதும் 2 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை உருவாக்கி வருகிறது.
இந்தத் திட்டம் உட்பட 2030-க்குள் 6 ஜிகா வாட் புதுப்பிக்கத்தக்க எரி சக்தி திறனை அடையும் இலக்குடன், அரசாங்கத்தின் உறுதிப் பாட்டுக்கு இணங்க, இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரி சக்தி திறனை அதிகரிப்பது மற்றும் நிலையான மற்றும் தூய்மையான எரி சக்தி தீர்வுகளுக்கான நமது அர்ப்பணிப்புக்கு இது ஒரு சான்றாக அமையும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT