Published : 10 Oct 2023 04:10 AM
Last Updated : 10 Oct 2023 04:10 AM
ராமேசுவரம்: பாம்பன் கடற்பகுதியில் இருந்து பாம்பை போன்று தோற்றம் கொண்ட விலாங்கு மீன்கள் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
பாம்பனில் தெற்கே மன்னார் வளைகுடா கடற்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை இரவு கடலுக்குச் சென்ற விசைப் படகு மீனவர்கள் விரித்த வலையில் விலாங்கு மீன் ஒன்று சிக்கியிருந்தது. சுமார் 8 கிலோ எடையில் 8 அடி நீளம் கொண்ட மீனை பாம்பன் கடற்கரைக்கு மீனவர்கள் கொண்டு வந்தனர்.
இது குறித்து மீன் வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது, உலகம் முழுவதும் 600 வகையான விலாங்கு மீன்கள் உள்ளன. ஆங்குயில் பார்ம்ஸ் என்பது இதன் விலங்கியல் பெயர். பாம்பை போல தோற்றமளிக்கும் நன்னீரில் வாழும் விலாங்கு மீன்களைப் போலவே இவையும் தோற்றம் அளிக்கும். கடலில் வாழும் விலாங்கு மீன்கள் 5 செ.மீ முதல் 4 மீட்டர் நீளம் கொண்டவையாக இருக்கும்.
இதில் முரே ரக விலாங்கு மீன் மட்டும் 25 கிலோ வரை இருக்கும். விலாங்கு மீனின் முன் பகுதியிலும், வால் பகுதியிலும் துடுப்புகள் இருந்தாலும் அவையும் பக்கவாட்டில் ரிப்பன் போல வளைந்து உடலோடு உடலாக ஒட்டியிருக்கும். இந்த துடுப்புகள் தான் விலாங்கு மீன்கள் நீந்த உதவியாக உள்ளன.
தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் விலாங்கு மீன்களுக்கு அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளிலும், சீனா, கொரியா, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய ஆசிய நாடுகளிலும் வரவேற்பு உள்ளது. இவை இந்நாடுகளின் நட்சத்திர விடுதிகளில் உணவாக பரிமாறப்படுகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT