Published : 06 Oct 2023 05:31 AM
Last Updated : 06 Oct 2023 05:31 AM
ஓசூர்: ‘நீங்கள் ரூ.6,902 கோடிக்கு வர்த்தகம் செய்துள்ளீர்கள். எனவே, ரூ.1,932 கோடி ஜிஎஸ்டி கட்ட வேண்டும்' என்று ஓசூர் முட்டை வியாபாரிக்கு நோட்டீஸ் வந்ததால் அதிர்ச்சியடைந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேர்ப்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜா நடராஜன்(50). அங்குள்ள உழவர் சந்தை சாலையில், சிறிய கடையில் முட்டை வியாபாரம் செய்துவருகிறார்.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் ராஜா நடராஜனுக்கு, சென்னை வணிக வரித் துறை அலுவலகத்திலிருந்து நோட்டீஸ் வந்தது. அது ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்ததால், அதை அவர் கண்டுகொள்ளவில்லை.
இதற்கிடையே, ராஜா நடராஜனின் மனைவி கலைஞர் மகளிர் உரிமை தொகைத் திட்டத்துக்கு விண்ணப்பித்திருந்தார். அந்த மனு நிராகரிக்கப்பட்டது. மனுவின்நிலையை அறிய இ-சேவை மையத்தை தொடர்பு கொண்டபோது, ‘குடும்பத்தில் ஆண்டுக்கு ரூ.50 லட்சத்துக்கு மேல் வியாபாரம் செய்து, தொழில் மற்றும் சேவை வரி கட்டும் தொழில் நிறுவன உரிமையாளர் உள்ளார். எனவே, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது' என தெரிவிக்கப்பட்டது.
இதனால் குழப்பமடைந்த ராஜா நடராஜன், தனக்கு வணிக வரித் துறை அனுப்பிய நோட்டீஸை, ஆங்கிலம் தெரிந்த நபரிடம் கொடுத்து விவரம் கேட்டபோது, ‘சென்னை எக்மோர் பகுதியில் மகாதேவ் என்டர்பிரைசஸ் என்றநிறுவனம் செயல்பட்டு வருகிறது.அந்த நிறுவனத்தின் உரிமையாளரான நீங்கள், உங்கள் நிறுவனத்தில் 2023 பிப்ரவரியில் ரூ.6,902கோடிக்கு வர்த்தகம் செய்துள்ளீர்கள். எனவே, ரூ.1,932 கோடி ஜிஎஸ்டிகட்ட வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ராஜா நடராஜன், ஓசூர் வணிக வரித் துறை அலுவலகம் சென்று விசாரித்தபோது, “உங்கள் பெயரில் மோசடி நடந்திருப்பதாகத் தெரிகிறது. இது தொடர்பாக விசாரிக்கிறோம்” என்று கூறி, அவரை அனுப்பி வைத்துள்ளனர்.
இது தொடர்பாக முட்டை வியாபாரி ராஜா நடராஜன் கூறும்போது, “நான் சிறிய கடை மூலம் முட்டை வியாபாரம் செய்துவருகிறேன். வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். நான் ரூ.6,902கோடிக்கு வர்த்தகம் செய்துள்ளதாகவும், ரூ.1,932 கோடி ஜிஎஸ்டிகட்ட வேண்டும் என்றும் வணிகவரித் துறை அனுப்பிய நோட்டீஸால் மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்டவர் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்வேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT