Published : 30 Sep 2023 09:03 AM
Last Updated : 30 Sep 2023 09:03 AM

இன்றே கடைசி: ரூ.2000 நோட்டுகளை மாற்ற காலக்கெடு நீட்டிக்கப்படுமா?

மும்பை: வங்கிகளில் ரூ.2000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள ரிசர்வ் வங்கி கொடுத்த காலக்கெடு இன்றுடன் (செப்.30) நிறைவடைகிறது. இந்நிலையில் காலக்கெடு நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்தச் சூழலில் சில நடைமுறை சிக்கல்களைக் கருத்தில் கொண்டு ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடுவை அக்டோபர் இறுதி வரை நீட்டிக்கக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் சிலர் ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதைக் கருத்தில் கொண்டு இந்த காலக்கெடு நீட்டிப்பது குறித்து ரிசர்வ் வங்கி பரிசீலிக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் நேற்று ரிசர்வ் வங்கி, ரூ.2000 நோட்டுக்களை செப்.30-க்குள் மாற்றாவிட்டால் அது உங்களிடம் இன்னொரு தாளாக மட்டுமே இருக்கும் என்று கூறியது. இதன்மூலம் ரிசர்வ் வங்கி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பரில் ரூ.2000 நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நோட்டுகளை கடந்த மே 19-ம் தேதி ரிசர்வ் வங்கி திடீரென திரும்ப பெறுவதாக அறிவித்தது. 2023 செப்.30-ம் தேதிக்கு பிறகு ரூ.2000 நோட்டுகள் செல்லாது என்றும், அந்த நோட்டுகளை வைத்திருப்பவர்கள் வங்கியில் ஒப்படைக்குமாறும் அறிவிப்பை வெளியிட்டது. தொடர்ந்து ரூ.2000 நோட்டுக்கள் மாற்றப்பட்டு வந்தன.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் புழக்கத்தில் இருந்த ரூ.2000 நோட்டுக்கள் 93 சதவீதம் திரும்பப் பெறப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தது. அதில் 87 சதவீதம் நோட்டுகள் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டன என்றும் மீதமுள்ள 13 சதவீதம் வேறு நோட்டுகளாக மாற்றிக் கொள்ளப்பட்டன என்றும் தெரிவித்திருந்தது.

இத்தகைய சூழலில், தமிழகத்தில், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் (பங்க்), அரசு, ஆம்னி பேருந்துகளில் இன்று முதல் ரூ.2000 நோட்டுகள் வாங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பெட்ரோலிய விற்பனை உரிமையாளர் சங்கத் தலைவர் முரளி, ‘‘ரூ.2000 நோட்டுகளை மாற்ற 2 நாட்கள் மட்டுமே காலக்கெடு உள்ளது. செப். 29, 30-ம் தேதிகளில் மட்டுமே ரூ.2000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்ற முடியும் என்பதால் இந்த முடிவு எடுத்துள்ளோம்‘‘ என்று கூறியுள்ளார். செப்.2 நிலவரப்படியே 93 சதவீத ரூ.2000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுவிட்ட நிலையில், இன்று முடியும் காலக்கெடு நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x