Published : 28 Sep 2023 03:37 PM
Last Updated : 28 Sep 2023 03:37 PM
புதுச்சேரி: புதுச்சேரியின் முக்கியத் தொழில் விவசாயம். இங்கு நெல், கரும்பு மட்டுமில்லாமல் தோட்டப்பயிர்களும் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. இதில் முக்கியமானது வெற்றிலை. குறிப்பாக வில்லியனூர். சேந்தநத்தம் உட்பட பல பகுதிகளில் வெற்றிலை விளைவிக்கப்படுகிறது. முன்பு ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வெற்றிலை விவசாயத்தில் ஈடுபட்டு வந்தன. தற்போது கால மாற்றத்தினால் வெற்றிலை விவசாயம் சரிந்துள்ளது.
தற்போது 200 குடும்பங்கள் மட்டுமே இப்பணியில் உள்ளன. இச்சூழலில், இப்பகுதியில் சப்பாத்தி பூச்சி தாக்கி வெற்றிலை விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், "புதுச்சேரியில் தற்போது குறைந்த ஏக்கரில் தான் வெற்றிலை பயிரிடப்படுகின்றன, பல லட்சம் செலவு செய்து வெற்றிலை பயிரிட்டுள்ளோம். இதன் காலம் 24 மாதங்கள். தற்போது லட்சக்கணக்கில் செலவு செய்துள்ள நிலையில், சப்பாத்தி பூச்சி தாக்குதல் அதிகரித்துள்ளது.
இதனால் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் பயிரை காப்பாற்ற முடியாமல் பலரும் தோட்டத்துக்கே வராமல் இருக்கும் சூழல் உள்ளது. பலமுறை மருந்து அடித்தும் வெற்றிலை காய்ந்து போய் விடுகிறது. பல வெற்றிலைகள் சூம்பி போய் விட்டன. வெற்றிலையின் சுவையும் நன்றாக இல்லை.
வேளாண்துறையிடம் தெரிவி்த்தாலும் அவர்கள் வந்து பார்ப்பதில்லை. நோய்க்கான மருந்துகளையும் அவர்கள் பரிந்துரைப்பதில்லை. வேளாண்துறை இப்படியே கண்டுக்கொள்ளாமல் விட்டால் புதுச்சேரி பகுதியில் வெற்றிலை உற்பத்தியே இல்லாமல் போய்விடும்.
தமிழகத்தின் வரத்தையே நம்பியிருக்கும் சூழல் உருவாகும். வெற்றிலைப் பயிருக்கு தண்ணீர் செலுத்துவதற்கே வருவாய் இல்லாத நிலையில், தற்போதைய நோய் தாக்குதல் எங்களை பெரிதும் பாதிப்படையச் செய்துள்ளது- உண்மையில் புதுச்சேரி வேளாண் துறை மோசமாக உள்ளது. அரசின் மானியத்தால்தான் வேளாண் பணிநடக்கிறது.
இத்தொழிலில் கடந்த ஐந்து ஆண்டுகளாக எங்களுக்கு பெரிதாக லாபமில்லை. வெற்றிலை வியாபாரம் சரிந்து வருவதால் முன்பு போல் வெற்றிலை ஏலக்கடைகளே இல்லை. தாம்பூல வெற்றிலைதான் விற்கிறது. நாட்டு வெற்றிலை வியாபாரமும் இல்லை. முன்பு புண்ணாக்கு கரைசல் போட்டாலே சரியாகும். இப்போது பரவியுள்ள சப்பாத்தி பூச்சியை தடுக்க முடியாமல் தவிக்கிறோம். வழக்கமாக மழையால் பாதிக்கப்படுவோம்.
தற்போது இந்தப் பூச்சியால் பாதிக்கப்பட்டுள்ளோம். வெற்றிலை விவசாயமே புதுச்சேரியில் அழியும் நிலையிலுள்ளதை வேளாண்துறை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சோகமாக தெரிவிக்கின்றனர்.சேந்தநத்தம் பகுதியில் சப்பாத்தி பூச்சியால் பாதிக்கப்பட்டுள்ள வெற்றிலை பயிர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT