Published : 26 Sep 2023 06:02 AM
Last Updated : 26 Sep 2023 06:02 AM

கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்கம: ரூ.1.5 கோடிக்கு விற்பனை இலக்கு; 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி

காஞ்சிபுரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை தொடங்கி வைக்கிறார் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி. உடன் காஞ்சிபுரம் எம்.பி. க.செல்வம், எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன்.

காஞ்சிபுரம்: கோ-ஆப்டெக்ஸ் என அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் கடந்த ஆண்டு ரூ.16.91 கோடிக்கு சில்லறை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. பாரம்பரிய மிக்க நெசவுத் தொழிலில் நவீன உத்திகளை கையாண்டு அறிய வேலைப்பாடுகளுடன் பட்டு மற்றும் கைத்தறி ரக சேலைகள் புதிய வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும் பருத்தி ரக சேலைகள், லுங்கிகள், போர்வைகள், திரைச்சீலைகள், துண்டுகள், கைக்குட்டைகள், வேட்டிகள், ரெடிமேட் சட்டைகள், குர்தீஸ் மற்றும் பல ரகங்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுகின்றன. இந்த ஆண்டு புதிய ரக வரவுகளாக சில்க் லினன் சேலைகள், டிசைனர் காட்டன் சேலைகள் (GAATHA), டிசைனர் கலெக் ஷன் போர்வைகள் (GAATHA), காம்பிரே போர்வைகள், பாலி விஸ்கோஸ் சூட்டிங் ஆகியவை விற்பனைக்கு உள்ளதாக கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோ-ஆப்டெக்ஸ் வேலூர் மண்டலத்தின் கீழ் காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, சித்தூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 15 விற்பனை நிலையங்கள் இயங்கி வருகின்றன. கடந்த ஆண்டு தீபாவளிக்கு இந்த விற்பனை நிலையங்கள் மூலம் மட்டும் ரூ.7.07 கோடி விற்பனை செய்யப்பட்டது. தற்போது தீபாவளி 2023 பண்டிகை விற்பனை இலக்காக ரூ.14 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் காமாட்சி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் கடந்த ஆண்டு 0.71 கோடி விற்பனை செய்தது. இந்த ஆண்டு ரூ.1.50 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் அனைத்து விற்பனையங்களிலும் 30% சிறப்புத் தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. அதேபோல் 30% சிறப்பு தள்ளுபடியுடன் அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் வட்டியில்லா கடன் விற்பனை வசதியும் வழங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் எம்.பி. க.செல்வம், காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.வி.எம்.பி. எழிலரசன், கோ-ஆப்டெக்ஸ் மேலாளர் (உற்பத்தி & பகிர்மானம்) சு.ஞானபிரகாசம், கோ -ஆப்டெக்ஸ் மேலாளர் ச.பெருமாள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x