Published : 21 Sep 2023 06:25 PM
Last Updated : 21 Sep 2023 06:25 PM
குறைந்தது அந்நிய நேரடி முதலீடு: இந்தியாவில் 2022-23 நிதியாண்டில் ரூ.5.88 லட்சம் கோடி அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளதாகப் புள்ளி விவரம் கூறுகிறது. இது 2021-22 நிதியாண்டின் ரூ.7.03 லட்சம் கோடியைவிட 16% குறைவு. கடந்த நிதியாண்டில் அதிகளவாக சிங்கப்பூரிலிருந்து ரூ.1.42 லட்சம் கோடி வந்துள்ளது. மகாராஷ்டிரா ரூ.1.22 லட்சம் கோடி முதலீடை ஈர்த்து முதலிடத்தில் உள்ளது.
அதிகபட்சமாக ரூ.77 ஆயிரம் கோடியைக் கணினி சாப்ட்வேர், ஹார்டுவேர் துறை ஈர்த்துள்ளது. சர்வதேச அளவில் அந்நிய முதலீடு கணிசமாகச் சரிந்தது. சர்வதேச அளவில் பணவீக்கம் உயர்வு, பொருளாதார மந்தநிலை ஏற்பட்டதே இதற்குக் காரணம். அதேநேரம், ஜி20 நாடுகளில் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா விளங்குகிறது. எனவே, அந்நிய நேரடி முதலீடு நடப்பு நிதியாண்டில் கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
பணம் எடுக்க கார்டு தேவையில்லை: ஜப்பானைச் சேர்ந்த ஹிட்டாச்சி நிறுவனத்தின் அங்கமான ஹிட்டாச்சி பேமென்ட் சர்வீசஸ் யுபிஐ-ஏடிஎம்-ஐ அறிமுகம் செய்துள்ளது. இது மும்பையில் நடைபெற்ற பின்டெக் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. எந்த ஏடிஎம் மூலம் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை டெபிட் கார்டு இல்லாமலேயே எடுக்க முடியும்.
முதலில் ஏடிஎம்மில் எவ்வளவு பணம் எடுக்க வேண்டும் என்பதைத் தேர்வுசெய்ய வேண்டும். பின்னர் க்யூஆர் கோடு திரையில் தெரியும். உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள யுபிஐ செயலி மூலம் க்யூஆர் கோடை ஸ்கேன் செய்ய வேண்டும். பின்னர் யுபிஐ-க்கான ரகசியக் குறியீட்டு எண்ணை உள்ளீடு செய்தால் ஏடிஎம்மில் இருந்து பணம் வரும்.
பரஸ்பர நிதி முதலீடு உயர்வு: ஆகஸ்ட் 31 நிலவரப்படி நாட்டின் ஒட்டுமொத்த பரஸ்பர நிதி முதலீடு ரூ.46.63 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2013 ஆகஸ்ட் 31-ல் ரூ.7.66 லட்சம் கோடியாக இருந்த இந்த முதலீடு 10 ஆண்டில் 6 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பங்குச் சந்தை தொடர்புடைய பரஸ்பர நிதித் திட்டங்களில் ரூ.20,246 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 5 மாதங்களில் அதிகபட்ச அளவாகும். கடந்த ஜூலையில் வெறும் ரூ.7,626 கோடி மட்டுமே முதலீடு செய்யப்பட்டது. ஆகஸ்டில் சிறு நிறுவன நிதித் திட்டங்களில் (ஸ்மால் கேப்) மட்டும் ரூ.4,265 கோடி முதலீடு செய்யப்பட்டது. ஆகஸ்ட் 31 நிலவரப்படி மொத்த கணக்குகள் எண்ணிக்கை 15.42 கோடியாக இருந்தது.
மின் வாகன விற்பனை அதிகரிப்பு: இந்த ஆண்டில் முதல் 8 மாதங்களில் 9,65,868 மின்சார வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் விற்பனையான 5,85,781 வாகனங்களுடன்ஒப்பிடும்போது 65% அதிகம். இதில் இருசக்கர வாகனங்கள் 5,52,439 (57.19%), 3 சக்கர வாகனங்கள் 3,56,837 (37%), கார்கள் 53,206 (5.5%), பேருந்து, லாரி உள்ளிட்ட வர்த்தக வாகனங்கள் எண்ணிக்கை 3,065 (0.31%). ஒட்டுமொத்த விற்பனையில், உத்தரப்பிரதேசம், மகாராப்ஷ்டிரம், கர்நாடகம், தமிழ்நாடு, குஜராத், ராஜஸ்தான் ஆகிய 6 மாநிலங்களின் பங்கு 60%. 2022இல் மொத்தம் 10,24,781 வாகனங்கள் விற்பனையாயின. இது இந்த ஆண்டில் 15 லட்சத்தை நெருங்கும் என எதிரிபார்க்கப்படுகிறது.
எகிறும் டிமேட் கணக்குகள்: நிறுவனங்களின் பங்குகளை மின்னணு முறையில் சேமிக்கவும் வர்த்தகம் செய்யவும் டிமேட் கணக்குகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட்டில் மட்டும் 31 லட்சம் டிமேட் கணக்குகள் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன. இது இந்த ஆண்டில் ஒரே மாதத்தில் தொடங்கப்பட்ட அதிகபட்சப் புதிய கணக்குகள். கடந்த ஜூலையுடன் ஒப்பிடும்போது 2.4%, கடந்த ஆண்டின் ஆகஸ்ட்டுடன் ஒப்பிடும்போது 47% அதிகம். இதன்மூலம் மொத்த டிமேட் கணக்குகள் எண்ணிக்கை 12.66 கோடியாக அதிகரித்துள்ளது. இது கரோனாத் தாக்கத்துக்கு முன்பு இருந்த அளவைப் போல 3 மடங்கு அதிகமாகும். ஒரு பான் எண்ணைக் கொண்டு எத்தனை டிமேட் கணக்கு வேண்டுமானாலும் தொடங்கலாம்.
புதிய லேப்டாப்கள் அறிமுகம்: மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான ஐடிஐ, ‘ஸ்மாஷ்’ என்ற பெயரில் லேப்டாப், சிறிய கணினியை அறிமுகம் செய்துள்ளது. அமெரிக்காவின் இன்டல் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து இந்த லேப்டாப்கள் தயாரிக்கப்படுகின்றன. ஐ3, ஐ5, ஐ7 ஆகிய திறன்களில் கிடைக்கிறது. இதில் சிறிய கணினியானது சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு தயாரிக்கப்படுகிறது.
மற்ற கணினிகளுடன் ஒப்பிடும்போது இதில் குறைவான கார்பன் இருப்பதால் மின்னணுக் கழிவுகள் குறையும். மின்சாரத்தையும் குறைவான அளவிலேயே நுகரும். மொத்தத்தில் இந்தத் தயாரிப்புகள் மின்சாரம், செலவு, பணியிடத்தை மிச்சப்படுத்தும் என ஐடிஐ தெரிவித்துள்ளது. லேப்டாப், கணினிகளின் இறக்குமதிக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்த நிலையில் ’ஸ்மாஷ்’ அறிமுகமாகி உள்ளது.
தினமும் 40 ஆயிரம் பரிவர்த்தனை: சிறு வியாபாரிகளுக்கு உதவும் வகையில் ஓஎன்டிசி (Open Network for Digital Commerce) என்ற டிஜிட்டல் நெட்வொர்க் தளத்தை மத்திய அரசு உருவாக்கியது. உள்ளூர் வர்த்தகத்தை ஊக்குவிப்பதன் மூலம் அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்களின் ஏகபோகத்தை உடைக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டதுதான் ஓஎன்டிசி. இணைய வழியில் பொருள்களை வாங்குவோர், விற்போர், டெலிவரி பார்ட்னர்களை ஒருங்கிணைக்கும் தளமாக ஓஎன்டிசி உள்ளது. தற்போது ஓஎன்டிசி தளத்தில் சராசரியாகத் தினமும் 40 ஆயிரம் பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. இது அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் 1,00,000 என்கிற மைல்கல்லை எட்டும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கால் பதித்த ‘ஆப்பிள்’ - பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட ஆப்பிள் ஸ்மார்ட்போனை வாங்கிவிட வேண்டும் என்பதே இன்றைய இளைஞர்களின் கனவு. அந்தக் கனவை நனவாக்கும் வகையில், ஆப்பிள் நிறுவனம் தனது முதல் விற்பனையகத்தை மும்பையில் தொடங்கியுள்ளது. 28,000 சதுர அடி பரப்பளவில் பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அந்த விற்பனையகம், வாடிக்கையாளருக்குத் தேவையான அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்கும்.
மேலும் உள்ளூர்ச் சந்தைக்குத் தேவைப்படும் ஐ-போன்களை இந்தியாவிலேயே தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாக ஆப்பிள் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார். சீனா, தென்கொரிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள் 4% பங்கைக் கொண்டுள்ளது.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கிடுக்கிப்பிடி: வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்களில் பெற்றக் கடனைத் திருப்பிச் செலுத்திய பிறகும் அசல் ஆவணங்களை வாடிக்கையாளர் களுக்குத் திருப்பித் தருவதில் தாமதம் ஏற்படுவதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்துக் கடனைத் திருப்பிச் செலுத்திய 30 நாள்களுக்குள் அசையும், அசையாச் சொத்துகளின் அனைத்து அசல் ஆவணங்களையும் வாடிக்கையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு வழங்கத் தவறினால் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.5,000 அபராதமாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இது வரும் டிசம்பர் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.
முதல் செயற்கை நுண்ணறிவு மாநாடு: இந்தியாவில் ‘குளோபல் இந்தியா ஏஐ 2023’ மாநாடு வரும் அக்டோபர் 14, 15 தேதிகளில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப துறையில் இந்தியா சார்பில் நடத்தப்படும் முதல் சர்வதேச மாநாடு. இதில் முன்னணி ஏஐ நிறுவனங்கள் ஆராய்ச்சியாளர்கள், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
அடுத்த தலைமுறை கற்றல், பவுண்டேஷன் ஏஐ மாதிரிகள், சுகாதாரம், நிர்வாகம், அடுத்தத் தலைமுறை மின்சார வாகனங்களில் ஏஐ பயன்பாடுகள், எதிர்கால ஏஐ ஆராய்ச்சிப் போக்குகள், ஏஐ கம்ப்யூட்டிங் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் இந்த மாநாட்டில் விரிவான விவாதங்கள் நடத்தப்பட உள்ளதாக மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT