Published : 18 Sep 2023 03:35 PM
Last Updated : 18 Sep 2023 03:35 PM

குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய விவசாய துறைக்கு தேயிலை மாற்றப்படுமா? - நிரந்தர தீர்வை எதிர்நோக்கும் விவசாயிகள்

உதகை: நீலகிரி மாவட்டத்தின் இரு முக்கிய தொழில்கள் தேயிலை மற்றும் சுற்றுலா. மாவட்டத்தின் பொருளாதார சூழ்நிலையை நிர்ணயிப்பதில் விவசாயம் முதல் இடத்தில் உள்ளது. 1,33,000 ஏக்கர் பரப்பில் தேயிலை, 17,000 ஏக்கர் பரப்பில் காபி, 2,400 ஏக்கர் பரப்பில் மிளகு, 2000 ஏக்கர் பரப்பில் ஏலக்காய், 17,000 ஏக்கர் பரப்பில் மலை காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகின்றன. இதில், தேயிலை விவசாயத்தில் மட்டும் சுமார் 65 ஆயிரம் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் தவிர, இத்தொழிலை சார்ந்து கூலித் தொழிலாளர்கள் உட்பட மறைமுகமாகவும், நேரடியாகவும் சுமார் 4 லட்சம் பேர் வாழ்கின்றனர்.

வட இந்தியாவில் அசாம் தேயிலையைபோல, தென்னிந்தியாவில் நீலகிரி தேயிலை மிக சிறப்பு வாய்ந்தது. அப்படிப்பட்ட தேயிலைக்கு கடந்த 40 ஆண்டுகளாக உரிய விலை கிடைக்காததால், விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. இதனால், பலர் விவசாயம் மேற்கொள்ள முடியாமல் திணறுகின்றனர். சிலர் விவசாயத்தை கைவிட்டு, வேறு வேலைக்காக சமவெளிப் பகுதிகளுக்கு சென்றுவிடுகின்றனர்.

இந்நிலையில் பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கக் கோரியும், நீதிமன்ற வழிகாட்டுதலின்படி விலையை அமல்படுத்தக் கோரியும் கடந்த 1-ம் தேதி முதல் மாவட்டத்திலுள்ள 400 கிராமங்களில் சிறு தேயிலை விவசாயிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

படுகரின மக்கள் வசிக்கும் தொதநாடு, மேற்குநாடு, புறங்காடு, குந்தசீமை ஆகிய நான்கு சீமைகளுக்கு உட்பட்ட 400 கிராமங்களில் தினந்தோறும் சுழற்சி முறையில், ஒரு கிராமத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது. ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளும் பங்கேற்கின்றனர். பாலகொலா கிராமத்தை சேர்ந்த 97 வயது மூதாட்டி குள்ளியம்மாளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

15 நாட்களுக்கு மேலாகியும் இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காத நிலையில், நிரந்தர தீர்வு எட்டும் வரை இம்முறை போராட்டத்தை திடமுடன் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், படுகரின மக்களின் அமைப்பான நாக்கு பெட்டா நலச்சங்கம், இப்பிரச்சினை தொடர்பாக அதிகாரிகள் மற்றும் அரசு மட்டத்தில் பேசி வருகிறது. குன்னூர் உபாசி மாநாட்டில் பங்கேற்ற மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் செயலாளர் அமர்தீப்சிங் பாட்டியாவிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

குன்னூர் உபாசி மாநாட்டில் பங்கேற்க வந்த மத்திய வர்த்தகத் துறை
கூடுதல் செயலாளர் அமர்தீப்சிங் பாட்டியாவை சந்தித்து
கோரிக்கை மனு அளித்த நாக்குபெட்டா நலச்சங்கத்தினர்.

இதுதொடர்பாக நாக்குபெட்டா நலச் சங்க தலைவர் பாபு கூறும்போது, "தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி ஐஏஎஸ் அதிகாரிகள், அமைச்சர்கள், எம்பி-க்கள் என பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கோரிக்கை மனு அளித்துவிட்டோம். கடைசியாக, குன்னூர் உபாசி அரங்கில் நடந்த கூட்டத்தில் தேயிலைக்கு குறைந்தபட்ச விலை தருவதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை.

குன்னூரில் நடந்த ஏலத்தில் 75 சதவீதம் மட்டுமே தேயிலை தூள் விற்பனையானது. 25 சதவீதம் தேங்கிவிட்டது. விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. சாமிநாதன் கமிட்டி அறிக்கையின்படி, ஒரு கிலோ தேயிலை உற்பத்திக்கு ரூ.22.50 செலவாகிறது என்றும், அதிலிருந்து 50 சதவீதம் கூடுதலாக நிர்ணயம் செய்து ரூ.33.75 விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த அறிக்கையும் பயன்பாட்டுக்கு வரவில்லை.

தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அமல்படுத்த கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளாம்" என்றார். இந்நிலையில், உண்ணாவிரதம் தொடர்பாக பேசிய சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், "நீலகிரி மாவட்டத்தில் விளையும் பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கக் கோரி விவசாயிகள் போராடி வருகின்றனர். இதுகுறித்து மத்திய அரசு மற்றும் தேயிலை வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேயிலை வாரிய அதிகாரிகள், விவசாய பிரதிநிதிகள், மாவட்ட நிர்வாகம், தேயிலை தொழிலை சார்ந்தவர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்துவேன். நீலகிரி எம்பி-யும் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, இப்பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்தார்.

தேயிலை விவசாயிகளின் பிரச்சினை குறித்து அறிந்த முதல்வர், மத்திய வர்த்தகத் துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். விரைவில் தேயிலை பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்" என்றார். இப்பிரச்சினைக்கு, தேயிலையை தோட்டப் பயிர்கள் துறையிலிருந்து விவசாயத் துறைக்கு மாற்றுவதே தீர்வாகும் என தேயிலை விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட தேயிலை விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறும்போது, "மத்திய அரசின் தோட்டப் பயிர்கள் துறையின் கீழ் தேயிலை உள்ளது. இத்துறையில் பெரும் நிறுவனங்கள் மற்றும் தேயிலை, காபி, ரப்பர், வாசனை திரவியங்கள் உள்ளன.

விவசாயத் துறைக்கு தேயிலையை மாற்றினால்தான், வேளாண் பயிர்களுக்கு வழங்கப்படும் மானியம், சலுகைகள் கிடைக்கும். விவசாயத் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டால் மட்டுமே, தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய இயலும். எனவே, தேயிலையை தோட்டப் பயிர்கள் துறையிலிருந்து விவசாயத் துறைக்கு மத்திய அரசு மாற்ற வேண்டும்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x