Published : 16 Sep 2023 06:46 AM
Last Updated : 16 Sep 2023 06:46 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். குறிப்பாக கிருஷ்ணகிரி, பர்கூர், வேப்பனப்பள்ளி, காவேரிப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், தக்காளி, கத்தரிக்காய், வாழை, முள்ளங்கி, வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளை சாகுபடி செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக, சுமார் 500 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் வெண்டைக்காய் சாகுபடி செய்துள்ளனர். கடந்த ஆண்டைவிட நிகழாண்டில் வெண்டைக்காய் சாகுபடி அதிகரித்துள்ளது. இதனால் கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுவதால், விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பர்கூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி மோகன் கூறும்போது, நிகழாண்டில் எங்கள் பகுதியில் பரவலாக பெய்த மழையால், இப்பகுதியில் விவசாயிகள் பலர் நிலக்கடலை மற்றும் வெண்டைக்காய் சாகுபடியை செய்துள்ளனர். வெண்டைக்காய் விதையை விதைத்த 40 நாட்களில் அறுவடைக்கு தயாராகிறது. இதில் பூச்சி தாக்குதலைத் தடுக்க விதைத்த 20 நாட்களுக்குப் பிறகு ஒரு முறை மட்டும் டிஏபி உரம் தெளிக்க வேண்டும். 3 நாளுக்கு ஒரு முறை தண்ணீர் விட வேண்டும். தொடர்ந்து தினமும் 3 மாதங்களுக்கு வெண்டையை அறுவடை செய்யலாம்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.40 முதல் 45 வரை விலை போனது. ஆனால் தற்போது விளைச்சல் அதிகரித்து உள்ளதால் தரத்துக்கு ஏற்ப கிலோ ரூ.15 முதல் ரூ.10 வரை விற்பனையாகிறது. இதனால் எங்களுக்கு விதைப்பு முதல் அறுவடை செய்து சந்தைகளுக்கு கொண்டு செல்ல ஏற்படும் செலவு தொகை கூட கிடைப்பதில்லை. மகசூல் அதிகரிப்பால் விலை குறைந்துள்ளது. வெண்டைக்காய் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது, என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT