Published : 15 Sep 2023 11:41 AM
Last Updated : 15 Sep 2023 11:41 AM
கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே வடமாநில தொழிலாளர்களை மையமாக வைத்து அமாவாசை நாளில் ஜவுளிச் சந்தை கூடுகிறது. இதன் மூலம் 50-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் பலன் அடைந்து வருகின்றனர்.
பர்கூரில் முக்கிய வர்த்தகமாக ஜவுளித் தொழில் உள்ளது. இங்கு கடந்த 1975-ம் ஆண்டில் 5 கடைகளுடன் தொடங்கப்பட்ட ஜவுளிக் கடைகள், 1983-ம் ஆண்டில் ஒரே இடத்தில் 100 கடைகள் கட்டப்பட்டது. இங்கு குறைந்த விலைக்கு ஜவுளிகள் விற்பனை செய்யப்படுவதால், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்திலிருந்து இப்பகுதிக்கு வரும் மக்கள் இங்கு வந்து ஜவுளியைக் கொள்முதல் செய்து வருகின்றனர்.
தற்போது, இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளிக் கடைகளுடன் பர்கூர் ஜவுளி சந்தையாக செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து ஜவுளிகளை மொத்தமாக வாங்கும் சிறு வியாபாரிகள் பலர் குக்கிராமங்களில் தவணை முறை திட்டத்தில் ஜவுளியை விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பர்கூர் அருகே சிப்காட் மற்றும் 100-க்கும் மேற்பட்ட கிரானைட் குவாரி மற்றும் மெருகூட்டும் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இத்தொழிலாளர்கள் விடுமுறை நாட்களில் பர்கூரில் பல்வேறு பொருட்களை கொள்முதல் செய்வது வழக்கம்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பர்கூர் - ஜெகதேவி செல்லும் சாலையில் அச்சமங்கலம் பிரிவு ரோட்டில், வட மாநில தொழிலாளர்களை மையமாக கொண்டு ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று ஜவுளிச் சந்தை கூடுகிறது. இதன் மூலம் சிறு வியாபாரிகள் பலன் அடைந்து வருகின்றனர்.
இது தொடர்பாக ஜவுளி வியாபாரிகள் கூறியதாவது: பர்கூர் பகுதியில் உள்ள கிரானைட் உள்ளிட்ட தொழிற்சாலைகளுக்கு அமாவாசை தினத்தில் தொழிலாளர்ளுக்கு விடுமுறை அளிக்கின்றனர். இதனால், அன்றைய தினம் தொழிலாளர்கள் பலர் ஜவுளி உள்ளிட்ட பொருட்களைக் கொள்முதல் செய்கின்றனர். இதை மையமாக வைத்து, நாங்கள் இங்கு சாலையோரங்களில் கடை அமைத்து ஜவுளி விற்பனையில் ஈடுபட்டு வருகிறோம்.
தொடக்கத்தில், 20 வியாபாரிகள் மட்டும் கடைகள் போட்டோம். விற்பனை வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகள் விரித்து விற்பனை செய்து வருகிறோம். அமாவாசை நாளில் மட்டும் இச்சந்தைக் கூடும். இங்கு, பெரும்பாலும் சிறு வியாபாரிகள் மட்டுமே கடை போடுகிறோம்.
இதனால், குறைந்த விலைக்கு ஜவுளி விற்பனை செய்ய முடிகிறது. இதன் மூலம் எங்களுக்கு ஓரளவுக்கு வருவாய் கிடைக்கிறது. தற்போது, பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. வடமாநில தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் மக்களும் இங்கு ஆடைகளை வாங்கிச் செல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT