Published : 15 Sep 2023 04:00 AM
Last Updated : 15 Sep 2023 04:00 AM

சந்தைப்படுத்துதலை ஊக்குவிக்க கூடுதல் கவனம் தேவை: வேளாண் பல்கலை. மாநாட்டில் வலியுறுத்தல்

வேளாண் பல்கலைக்கழகத்தில் தொடங்கிய மூன்று நாள் தேசிய வேளாண் சந்தைப்படுத்துதல் குறித்த மாநாட்டில் பேசிய மத்திய நிதி ஆயோக் அமைப்பின் முழு நேர உறுப்பினர் ரமேஷ் சந்த். அருகில் துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி உள்ளிட்டோர். படம்: ஜெ.மனோகரன்

கோவை: சந்தைப்படுத்துதலை ஊக்குவிக்க கூடுதல் ஆராய்ச்சிகள் தேவை என, வேளாண் பல்கலை. மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம், ஹைதராபாத்தில் உள்ள இந்திய வேளாண் சந்தைப்படுத்துதல் சங்கம் ஆகியவை சார்பில் 37-வது தேசிய வேளாண் சந்தைப் படுத்துதல் மாநாடு, வேளாண் பல்கலை. வளாகத்தில் நேற்று தொடங்கியது.

துணை வேந்தர் வெ.கீதா லட்சுமி தலைமை வகித்து பேசும்போது, ‘‘ஊட்டச்சத்து பாதுகாப்பு, அறுவடைக்கு பிந்தைய இழப்புகளைக் குறைத்தல் மற்றும் ஏற்றுமதி சந்தைப்படுத்துதலை ஊக்குவிக்க கூடுதல் ஆராய்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். விவசாய உற்பத்தியாளர் குழுக்களின் பொருட்களை சந்தைப்படுத்த வேளாண்மைப் பல்கலைக்கழகம் அக்ரி கார்ட் என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளது.

விவசாய உற்பத்தியாளர் குழுக்களுக்கு தேவையான தொழில்நுட்ப வழிகாட்டுதலை வழங்குதல் மற்றும் சந்தை நுண்ணறிவு பயிற்சி வழங்குதல் போன்ற முயற்சிகளையும் வேளாண் பல்கலை. மேற்கொண்டு வருகிறது’’ என்றார்.

மத்திய அரசின் விவசாய செலவுகள் மற்றும் விலைகள் ஆணையத்தின் தலைவரான விஜய் பால் ஷர்மா பேசும்போது, ‘‘விவசாயிகளின் வருமானம் மற்றும் வாழ்வாதாரத்தில் முன்னேற்றம் காண வேண்டியுள்ளது. டிஜிட்டல் தொழில் நுட்பம்: சந்தை உள்கட்டமைப்பை உருவாக்க, தனியார் நிதியை ஈர்க்க வேண்டியுள்ளது.

சந்தைப் படுத்துதலில் செயல்திறனை மேம்படுத்தவும், நம்பகமான விலைக் கணிப்பு மற்றும் சந்தை தகவல்களை பெற செயற்கை நுண்ணறிவு என்ற டிஜிட்டல் தொழில் நுட்பம் அதிக சாத்தியக் கூறுகளைக் கொண்டுள்ளது’’ என்றார்.

தொடர்ந்து, புதுடெல்லியில் உள்ள இந்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பின் முழு நேர உறுப்பினர் ரமேஷ் சந்த், ஹைதராபாத்தின் வேளாண் சந்தைப்படுத்துதல் சங்கத்தின் செயலாளர் சத்திய நாராயணா, தலைவர் மகேந்திர தேவ், முன்னாள் துணைவேந்தர் சி.ராமசாமி உள்ளிட்டோர் பேசினர். இம்மாநாடு மூன்று நாள் நடக்கிறது. இதில் ஆராய்ச்சி யாளர்கள், மாணவர்கள், அறிஞர்கள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x