Published : 12 Sep 2023 04:00 AM
Last Updated : 12 Sep 2023 04:00 AM

மின் கட்டண உயர்வு பிரச்சினை: முதல்வரிடம் நேரில் முறையிட தமிழ்நாடு தொழில் அமைப்புகள் முடிவு

கோவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு தொழில் அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர்கள். படம்: ஜெ.மனோகரன்

கோவை: மின் கட்டண பிரச்சினை தொடர்பாக தமிழக அரசை வலியுறுத்த, 165 தொழில் அமைப்புகளை உள்ளடக்கிய புதிய அமைப்பு கோவையில் தொடங்கப்பட்டுள்ளது. முதல்வரை நேரில் சந்திக்கவும் இந்த அமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.

மின் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து போராடுவதற்காக, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த 90 தொழில் அமைப்புகளை உள்ளடக்கிய ‘தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு’ சமீபத்தில் கோவையில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு சார்பில் சில தினங்களுக்கு முன் காரணம் பேட்டையில் உண்ணாவிரத போராட்டமும் நடைபெற்றது.

இந்நிலையில், மின் கட்டண உயர்வு பிரச்சினை தொடர்பாக தமிழக அரசை வலியுறுத்த 165 தொழில் அமைப்புகளை உள்ளடக்கிய ‘தமிழ்நாடு தொழில் அமைப்புகள்’ உருவாக்கப் பட்டுள்ளது. கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் (கொடிசியா), தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கம் (சீமா), இந்திய தொழில் வர்த்தக சபை (ஐசிசிஐ), கோவை, தமிழ்நாடு ஓபன் எண்ட் நூற்பாலைகள் சங்கம் (ஓஸ்மா),

தமிழ்நாடு மின் நுகர்வோர் சங்கம் (டீகா), காட்மா, கோப்மா, லகு உத்யோக் பாரதி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த தொழில் அமைப்புகளின் கலந்தாய்வு கூட்டம் அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா வர்த்தக தொழிற்காட்சி வளாகத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்தின் முடிவில், ‘கொடிசியா’ தலைவர் திருஞானம், ‘காட்மா’ தலைவர் சிவக்குமார், ‘ஓஸ்மா’ தலைவர் அருள்மொழி, ‘டீகா’ நிர்வாகி பிரதீப், ‘லகு உத்யோக் பாரதி’ நிர்வாகிகள் சிவக்குமார், கல்யாணசுந்தரம்,‘கோப்மா’ தலைவர் மணிராஜ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகம் தொழில்துறையில் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இந்தியாவின் தொழில்வளர்ச்சியை அடுத்த தளத்துக்கு கொண்டு செல்வதிலும் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. இவற்றில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்(எம்எஸ்எம்இ) முக்கிய பங்கு வகிக்கின்றன.

பொருளாதார மந்த நிலை, மூலப்பொருட்களின் விலை உயர்வு, திறன்மிகு தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங் களால் தொழில் நிறுவனங்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றன. கடந்த ஆண்டு அதிகப்படியாக உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தால் எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளன.

தமிழக அரசிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. மின் கட்டண உயர்வால் எம்எஸ்எம்இ நிறுவனங் கள் நிரந்தரமாக முடங்கிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மின் கட்டண உயர்வு, மூலப்பொருட்கள் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக தமிழகத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் 15 சதவீத எம்எஸ்எம்இ நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

எனவே, குடிசை மற்றும் குறு மின் நுகர்வோருக்கு (12 கேவி லோடு) 3ஏ(1) மின் இணைப்பு வழங்க வேண்டும். தாழ்வழுத்த மின் கட்டணத்தை எல்டி நிலை கட்டணம் 0-12 கேவி வரை ஒரு கேவி ரூ.72-க்கு பதில் ரூ.20 மட்டும் வசூலிக்க வேண்டும். 0-50 கேவி-க்கு ரூ.77-க்கு பதில் ரூ.35, 50 -112 கேவி-க்கு ரூ.153-க்கு பதில் ரூ.35, 112-150 கேவி வரை ரூ.562-க்கு பதில் ரூ.350 என குறைக்க வேண்டும்.

உயர் மின்அழுத்த பயன்பாட்டா ளர்களுக்கான அதிகபட்ச கேட்புக்கட்டணம் தற்போது வசூலிக்கப்படும் ரூ.562-லிருந்து ரூ.350 ஆக குறைக்க வேண்டும். உச்ச பயன்பாட்டு நேர கட்டணத்தை பொறுத்தவரை எல்டி நுகர்வோருக்கு முற்றிலும் நீக்க வேண்டும். எச்டி நுகர்வோருக்கு 20 சதவீதம் மட்டும் வசூலிக்க வேண்டும்.

ஆண்டுதோறும் 1 சதவீதம் மட்டும் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும். கட்டிட மேற்கூரைகளில் அமைக்கப்படும் சூரியஒளி மின்உற்பத்தி திட்டங்களுக்கு நெட்வொர்க்கிங் கட்டணத்தை முற்றிலுமாக நீக்க வேண்டும். 112-150 கேவி வரை பயன்படுத்தும் தொழிற்சாலைகள் தனியாரிடமிருந்து நேரடியாக மின்சாரம் வாங்கும் நடைமுறைக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

இக்கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் உடனடியாக பரிசீலித்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இது குறித்து தமிழக முதல்வர் மற்றும் மின்வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளிக்கவும், விரைவில் முதல்வரை நேரில் சந்திக்கவும் முடிவு செய்துள்ளோம். தமிழகம் முழுவதும் உள்ள 165 தொழில் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் ஒன்றிணைந்து செயல்பட தொடங்கியுள்ளோம்.

கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசித்து அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x