Published : 12 Sep 2023 04:02 AM
Last Updated : 12 Sep 2023 04:02 AM

ஈரோட்டில் மஞ்சள் குவிண்டால் ரூ.13,000-க்கு விற்பனை - ஒரே மாதத்தில் ரூ.2,000 விலை சரிவு

ஈரோடு: ஈரோடு மஞ்சள் சந்தையில், கடந்த மாதம் குவிண்டால் ரூ.15 ஆயிரத்தைக் கடந்து விற்பனையான மஞ்சளின் விலை, நேற்று ரூ.13 ஆயிரமாக சரிந்ததால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், ஈரோடு மற்றும் கோபி கூட்டுறவு சங்கம் ஆகிய நான்கு இடங்களில் திங்கள் முதல் வெள்ளி வரை ஏலம் மூலம் மஞ்சள் விற்பனை நடக்கிறது. ஈரோடு மஞ்சள் சந்தையில் கடந்த ஜூலை மாதம் முதல் மஞ்சள் விலை உயரத் தொடங்கியது.

குவிண்டால் ரூ.10 ஆயிரத்துக்கு கீழ் விற்பனையாகி வந்த மஞ்சள் விலை, ரூ.14 ஆயிரத்தை தொட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், ஆகஸ்ட் முதல் வாரத்தில் மஞ்சள் விலை மேலும் அதிகரித்து, ரூ.15 ஆயிரத்து 422-க்கு விற்பனையானது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு மஞ்சள் விலை ரூ.15 ஆயிரத்தை கடந்து உச்சத்தைத் தொட்டது.

இந்நிலையில், நேற்றைய மஞ்சள் சந்தையில் குவிண்டால் ரூ. 13 ஆயிரத்து 59 ஆக சரிந்தது. நாள்தோறும் ஆயிரக்கணக் கான மூட்டை மஞ்சள் விற்பனைக்கு வந்து கொண்டு இருந்த நிலையில், விலை சரிவால், விற்பனைக்கான மஞ்சள் வரத்தும் நேற்று வெகுவாகக் குறைந்தது. அதேபோல, விற்பனையான மூட்டைகளின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது.

பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்துக்கு நேற்று 168 மூட்டை மஞ்சள் வரத்தான நிலையில், 41 மூட்டை மஞ்சள் மட்டுமே விற்பனையானது. விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.8,169 முதல் ரூ.12 ஆயிரத்து 289 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.7,829 முதல் ரூ.11ஆயிரத்து 789 வரையும் விற்பனையானது.

ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு 596 மூட்டை மஞ்சள் வரத்தான நிலையில், 206 மூட்டை மஞ்சள் விற்பனையானது. விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.7,919முதல் ரூ.13 ஆயிரத்து 59-க்கு விற்பனையானது. கிழங்கு மஞ்சள் ரூ.7,419 முதல் ரூ.11 ஆயிரத்து 565 வரை விற்பனையானது. ஈரோடு கூட்டுறவு சங்கத்துக்கு 190 மூட்டை மஞ்சள் வரத்தான நிலையில், 128 மூட்டை விற்பனையானது.

விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.7,800 முதல் ரூ.11 ஆயிரத்து 464 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.7,255 முதல் ரூ.10 ஆயிரத்து 369 வரையும் விற்பனையானது. கோபி கூட்டுறவு சங்கத்தில் நேற்று ஏலம் நடக்கவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x