Last Updated : 12 Sep, 2023 04:04 AM

 

Published : 12 Sep 2023 04:04 AM
Last Updated : 12 Sep 2023 04:04 AM

வேப்பனப்பள்ளியில் இருந்து வெளி மாநிலத்துக்கு தினசரி 5 டன் கத்தரிக்காய் அனுப்பி வைப்பு

வேப்பனப்பள்ளி அருகே பாலனப்பள்ளி கிராமத்தில் அறுவடை செய்யப்பட்ட கத்தரிக்காயைத் தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளர்கள்.

கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளி பகுதியில் கத்தரிக்காய் மகசூல் அதிகரித் துள்ள நிலையில் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்குத் தினசரி 5 டன் கத்தரிக்காய் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

வேப்பனப்பள்ளி சுற்று வட்டாரப் பகுதிகளில் கத்தரிக்காய் சாகுபடியில் அதிகளவில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கத்தரிக்காய் சாகுபடியைப் பொறுத்த வரை நடவு செய்த 40 நாட்களில் அறுவடைக்கு கிடைக்கும். மேலும், 110 நாட்கள் வரை பலன் கிடைக்கும்.

இங்கு அறுவடை செய்யப்படும் கத்தரிக்காய் உள்ளூர் சந்தைகள், உழவர் சந்தை மற்றும் வேலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், கர்நாடக, ஆந்திர, கேரள மாநிலங்களுக்கும் விற்பனைக்குச் செல்கிறது. இந்நிலையில், வேப்பனப்பள்ளி சுற்று வட்டாரப் பகுதிகளில் கத்தரிக்காய் மகசூல் அதிகரித்துள்ள நிலையில், வெளி மாவட்ட, மாநிலங்களுக்கு அதிக அளவில் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இது தொடர்பாக பாலனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் கூறியதாவது: நிகழாண்டில் கத்தரிக்காய் மகசூல் அதிகரித்துள்ளது. மேலும், வழக்கத்தை விட ஆந்திர மாநிலம் குப்பம், கர்நாடக மாநிலம் பெங்களூரு, கோலார், பங்காரு பேட்டை, கேஜிஎஃப் உள்ளிட்ட பகுதிகளுக்கும், சேலம், வேலூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் அதிக அளவில் கத்தரிக்காய் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

கடந்தாண்டு இதே மாதத்தில் கிலோ ரூ.15-க்கு விற்பனையான நிலையில், தற்போது உள்ளூர் சந்தையில் தரத்தைப் பொறுத்து ரூ.15 முதல் ரூ.25 வரையும், வெளி மாநிலங்களில் ரூ.35 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. இங்கிருந்து தினமும் வாகனங்கள் மூலம் 3 முதல் 5 டன் வரை வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்ட சந்தைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x