Published : 07 Sep 2023 02:27 PM
Last Updated : 07 Sep 2023 02:27 PM

எம்.சாண்ட் S/O மலிவு விலை மாற்று மணல்: கழிவுகளை கலப்பதால் தரத்தை கண்காணிக்க கோரிக்கை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் எம்.சாண்ட் நிறுவனங்கள்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்.சாண்ட் தயாரித்து விற்பனை செய்யும் சில நிறுவனங்கள் கழிவுகள் கலந்த எம்.சாண்டை விற்பனை செய்வதாகவும் இதனால் கட்டி டத்தின் உறுதித் தன்மை பாதிக்கும் அபாயம் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மிகக் குறைந்த நிறுவனங்களே தரச்சான்று பெற்றுள்ளதால் மற்றவர்கள் விற்பனை செய்யும் எம்.சாண்ட்மண்ணை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று சமூக ஆவலர்கள் வலியுறுத்துகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு, செய்யாறு, வேகவதி ஆறு கள் ஓடுகின்றன. இந்த ஆறுகளில் இருந்து அள்ளப்படும் மணலே காஞ்சிபுரம், சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கட்டிடங்கள் கட்டுவதற்கு பயன்பட்டு வந்தன. இதற்காக அனுமதிக்கப்பட்ட மணல் குவாரிகள் விதிகளை மீறி மணல் அள்ளியதால் ஆறுகள் சுரண்டப்பட்டன.

நிலத்தடி நீர் பாதிப்புக்கு உள்ளாகி விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இந்த மணல் திருட்டு எதிராக பலதரப்பு மக்களும் போராட்டம் நடத்தியதாலும், நீதிமன்றம் தலையிட்டதன் அடிப்படையிலும் கடந்த 2013-ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு இன்று வரை அந்த தடை நீக்கப்படவில்லை.

கட்டிடப் பணிகளுக்கு மணல் மிகவும் அத்தியாவசியம் என்பதால் மணலுக்கு மாற்றாக எம்.சாண்ட் பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியுடன் தமிழகம் முழுவதும் நூற்றுக் கணக்கான எம்.சாண்ட் விற்பனை செய்யும் நிறுவனங்கள் உருவாகின.

இதன் ஒருபகுதியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட எம்.சாண்ட் தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு தயாரிக்கப்படும் எம்.சாண்ட் தரமானதா என்பதை பொதுப்பணித் துறையினர் ஆய்வு செய்து தர நிர்ணயச் சான்றிதழ் வழங்குகின்றனர். ஆனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெறும் 19 நிறுவனங்கள் மட்டுமே தர நிர்ணயச் சான்று பெற்றுள்ளன.

ஆனால் தர நிர்ணயச் சான்று பெறாமல் இயங்கும் எம்.சாண்ட் நிறுவனங்கள் சில ஜல்லியை உடைக்கும்போது உருவாகும் தேவையற்ற கழிவுகளை எம்.சாண்ட் எனப் படும் செயற்கை மணலுடன் கலந்து விற்பனை செய்தவாக புகார்கள் எழுந்துள்ளன. இவற்றை கட்டிடங்களுக்கு பயன்படுத்தும்போது அவற்றின் உறுதித் தன்மை குறையும் என்றும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

அரசுத் துறைகளின் கட்டிடங்கள், பள்ளிக் கட்டிடங்கள் கட்டும்போது தரநிர்ணயச் சான்று பெற்ற நிறுவனங்களில் இருந்து வாங்கப்படும் எம்.சாண்ட் பயன்படுத்தப்படுகிறதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

அதேபோல் பொதுமக்களும் தங்கள் வீடுகளுக்கு பயன்படுத்தும் எம்.சாண்ட் தரமானதா, அந்த நிறுவனம் தரச் சான்று பெற்ற நிறுவனமா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். இவ்வாறு தரமற்ற எம்.சாண்ட் மணலை பயன்படுத்தி கட்டப்படும் கட்டிடங்கள் விரைவில் விரிசல் விடுவதுடன், சில ஆண்டுகளில் கட்டிடங்கள் உருகுலைந்து பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

எனவே பொதுமக்களுக்கும், அரசுத் துறைகளும் கட்டிடங்களை கட்டும்போது தரமான எம்.சாண்ட் மணலையே பயன்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

பெத்துராஜ்

இதுகுறித்து சமூக ஆர்வலர் பெத்து ராஜிடம் கேட்டபோது அவர் கூறியது: அரசு மற்றும் தனியார் என யாராக இருந்தாலும் கட்டிடங்கள் கட்டும்போது அவை உறுதித் தன்மையுடன் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த கட்டிடங்களை பயன் படுத்துபவர்கள், அங்கு பணி செய்பவர்களுக்கும் பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்க முடியும். இதுபோன்ற தரமற்ற எம்.சாண்ட் பயன்படுத்தி கட்டப்படும் கட்டிடங்களால் பாதிப்புகள் ஏற்படும் அபயாம் உள்ளது.

இந்த விவகாரத்தில் மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் தலையிடவேண்டும். கட்டிடப் பணிகளுக்கு தரமான எம்.சாண்ட் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து எம்.சாண்ட் விற்பனையாளர்களும் தரச்சான்று பெற்று விற்பனை செய்வது, அதனை அடிக்கடி கண்காணிப்பது போன்றவற்றின் மூலம் தரமற்ற எம்.சாண்ட் விற்பனையை தடுக்க முடியும். இவ்வாறு கூறினார்.

இதுகுறித்து பொதுப்பணித் துறையின் கட்டிட பிரிவு அதிகாரிகளிடம் கேட்டபோது சென்னையில் இதற்கென தனிப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் முறை யாக ஆய்வு செய்து தர நிர்ணயச் சான்று களை வழங்கி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் எம்.சாண்ட் நிறுவனங்களுக்கும் இந்தச் சான்று வழங்கி யுள்ளனர். எம்.சாண்ட் தயாரிக்கும் நிறுவனங்கள் அவர்கள் கூறும் நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் தர நிர்ணயச் சான்றிதழ் பெறலாம் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x