Published : 07 Sep 2023 08:07 AM
Last Updated : 07 Sep 2023 08:07 AM
மும்பை: நாட்டின் முதல் யுபிஐ-ஏடிஎம் ஹிட்டாச்சி பேமண்ட் சர்வீசஸ் மூலம் ஒயிட் லேபிள் ஏடிஎம்(டபிள்யூஎல்ஏ) ஆக மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
நேஷனல் பேமண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) உடன் இணைந்து செயலாக்கத்துக்கு கொண்டுவரப்பட்ட இந்த ஏடிஎம் சேவை டெபிட் கார்டுகள் உதவியின்றி வாடிக்கையாளர்கள் தடையின்றி பணம் எடுக்கும் புதிய வசதியை உறுதி செய்யும்.
இதுகுறித்து என்பிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏடிஎம் பரிவர்த்தனையில் வாடிக்கையாளர்கள் கார்டுகளின் தேவையின்றி பணம் எடுக்கும் புதிய வசதியை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியடைகிறோம். தற்போதுள்ள ஏடிஎம்களில் யுபிஐ வசதியை ஒருங்கிணைப்பதன் மூலம் கார்டுகளின் துணையின்றி வாடிக்கையாளர்கள் ஏடிஎம்-களில் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும். தொலைதூர பகுதிகளில் வசிப்பவர்கள் இதனால் பெரிதும் பயனடைவர். ‘யுபிஐ ஏடிஎம்’ வங்கிச் சேவையில் புதிய மைல் கல்" என்று தெரிவித்துள்ளது.
வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம்-ல் யுபிஐ கார்டுலெஸ் சேவையை தேர்வு செய்ய வேண்டும். எவ்வளவு பணம் எடுக்க வேண்டும் என்பதை திரையில் என்ட்டர் செய்ய வேண்டும். அதன் பின்னர் திரையில் தோன்றும் கியூஆர் கோடை தனது மொபைலை பயன்படுத்தி ஸ்கேன் செய்தவுடன் யுபிஐ பின் நம்பரை பதிவிட்டு பரிவர்த்தனைக்கான செயல்முறையை உறுதிப்படுத்த வேண்டும். சில நொடிகளுக்குப் பிறகு வாடிக்கையாளர் தங்களுக்கு தேவையான பணத்தை ஏடிஎம்-ல் உடனடியாக பெற்றுக் கொள்ள முடியும்.
தற்போது கார்டு இல்லாமல் பணம் எடுக்க மொபைல் எண், ஓடிபிஆகியவை அத்தியாவசியமானதாக உள்ளது. பணத்தை எடுக்க வாடிக்கையாளர் ஏடிஎம் கார்டை கொண்டு செல்ல தேவையில்லை என்பது யுபிஐ-ஏடிஎம் மூலம் சாத்தியமாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT