Published : 04 Sep 2023 05:21 PM
Last Updated : 04 Sep 2023 05:21 PM
திருச்சி: கோரைப் பாய் உற்பத்தித் தொழில் கடந்த சில ஆண்டுகளாக கடும் நஷ்டத்தை சந்தித்து வருவதால் உற்பத்தியாளர்கள் கவலைய டைந்துள்ளனர். தமிழகத்தில் கரூர், திருச்சி, சேலம், திருநெல்வேலி, வந்தவாசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கோரைப் புல் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த கோரைப் புல்லைக் கொண்டு தயாரிக்கப்படும் பாய்கள் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
கோரைப் பாயில் படுத்தால் உடல் சூடு தணிந்து, உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கும் என்பதால், இன்றும் பலர் கோரைப் பாயில் படுப்பதை விரும்புகின்றனர். ஆனால், நவநாகரீக உலகில் பிளாஸ்டிக் பாய், போர்ம் மெத்தைகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தும் போக்கு அதிகரித்த காரணத்தால் கோரைப் பாய்க்கான தேவை சற்று குறைந்து விட்டதாக கோரைப் பாய் உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் முசிறி பகுதியில் கிடைக்கும் கோரைப் புல்லைக் கொண்டு 10 பெரிய நிறுவனங்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறு, குறு நிறுவனங்கள் விசைத்தறி மூலம் பாய் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன.
கோரைப் புல் உற்பத்தி குறைவு காரணமாக அவற்றின் விலையும் அதிகமாக உள்ளது. மேலும் அரசின் சலுகைகள் கிடைக்காததாலும் பாய் உற்பத்தித் தொழில் நஷ்டத்தை சந்தித்து வருகிறது என்கின்றனர் கோரைப் பாய் உற்பத்தியாளர்கள். முசிறியைச் சேர்ந்த கோரைப் பாய் உற்பத்தியாளரான என்.பாபு ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: முசிறி பகுதியில் படுக்கும் பாய், பந்திப் பாய், தடுக்குப் பாய், கட்டில் பாய், திருமண பாய் என 40-க்கும் மேற்பட்ட வகைகளில் பாய்கள் தயாரிக்கப்படுகின்றன.
முன்பு அதிக அளவில் கோரைப் புல் சாகுபடி செய்யப்படும். கடந்த சில ஆண்டுகளாக சாகுபடி பரப்பு குறைந்ததால், கோரைப் புல்லின் விலையும் அதிகமாக உள்ளது. தொழிலாளர்கள் கூலி, மின்சார கட்டணம் உயர்வு, ஜிஎஸ்டி போன்ற பல்வேறு காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக பாய் உற்பத்தித் தொழில் நஷ்டத்தை தான் சந்தித்து வருகிறது. இதனால் ஒரு பாய்க்கு ரூ.15 அளவுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, பாய் தொழிற்சாலைகளுக்கு 500 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்.
கோரைப் புல் தவிர பாய் தயாரிப்புக்காக வாங்கும் முக்கியமான மூலப் பொருட்களான சாயம், நூல், டேப் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு 12 முதல் 18 சதவீதம் வரை ஜிஎஸ்டி விதிப்பதாலும் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, விவசாயத்தின் மதிப்புக் கூட்டப்பட்ட பொருளான பாய் உற்பத்திக்கு உரிய மூலப் பொருட்களுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
மேலும், பாரம்பரியமான இந்த தொழிலை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே இந்த தொழிலை நம்பியுள்ள விவசாயிகள், உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் ஆகியோரது வாழ்வு சிறக்கும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT