Published : 03 Sep 2023 04:08 AM
Last Updated : 03 Sep 2023 04:08 AM
தஞ்சாவூர்: உலக அளவில் தேங்காய் உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகித்தாலும், இங்கு அதைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்று தென்னை வளர்ச்சி வாரிய சென்னை மண்டல இயக்குநர் இ.அறவாளி கூறினார்.
உலக தேங்காய் தினத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ‘தென்னையை நிலைப்படுத்துவதில் தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினர்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. கல்லூரியின் புலத் தலைவர் ஏ.வேலாயுதம் தலைமை வகித்தார்.
தென்னை வளர்ச்சி வாரிய உறுப்பினர் பண்ணைவயல் ஆர்.இளங்கோ, மாவட்ட வேளாண் இணை இயக்குநர் என்.கே.நல்லமுத்து ராஜா, துணை இயக்குநர் எஸ்.ஈஸ்வர், தேசிய உணவுப் பதன தொழில்நுட்பக் கழக நிறுவனப் புலத் தலைவர் என்.வெங்கடாஜலபதி, வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியர் ஆர்.அருண்குமார் முன்னிலை வகித்தனர்.
இதில் தென்னை வளர்ச்சி வாரிய சென்னை மண்டல இயக்குநர் இ.அறவாளி பேசியதாவது: இந்தோனேசியாவில் முதலில் பயிரிடப்பட்ட தென்னை, தற்போதுஉலகில் 16 நாடுகளில் பயிரிடப்பட்டு வருகிறது. இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் அதிக பரப்பளவில் தென்னை பயிரிடப்பட்டாலும், உலக அளவில் தேங்காய் உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.
ஆனாலும், இங்கு அதன் பயன்பாடு குறைவாகவே உள்ளது. தமிழகத்தில், டெல்டா மாவட்டங்களில் 57 ஆயிரம்ஹெக்டேரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கஜா புயலுக்குப் பிறகு தென்னை சாகுபடி பாதிக்கப்பட்டு, தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. தேங்காய்க்கு உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தேங்காயை மதிப்புக் கூட்டும் பொருளாக மாற்றி, விற்பனை செய்ய விவசாயிகளுக்கு பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தேங்காய் எண்ணெய் பயன்பாடு கேரளாவில் அதிகமாகவும், தமிழகத்தில் குறைவாகவும் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். கருத்தரங்கில், தென்னை விவசாயிகள், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT