Published : 03 Dec 2017 08:58 AM
Last Updated : 03 Dec 2017 08:58 AM
இ
ந்திய அளவில் தொழில்முனைவோர்கள் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது பாரதிய யுவ சக்தி டிரஸ்ட் (பிஒய்எஸ்டி). 1991-ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வரும் இந்த அமைப்புதான் முதன் முதலில் சிறு தொழில் முனைவோர்களுக்கான ஆலோசனை வழங்கும் திட்டத்தை (மென்டரிங் கான்செப்ட்) அறிமுகப்படுத்தியது. இதன் நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான லெஷ்மி வி.வெங்கடேசன் சமீபத்தில் சென்னை வந்திருந்தார். பாரதிய யுவ சக்தி டிரஸ்ட் 25-ம் ஆண்டை கொண்டாடும் வேளையில் அவருடனான உரையாடலில் இருந்து... இவர் குடியரசு முன்னாள் தலைவர் ஆர். வெங்கட்ராமனின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த அமைப்பின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளன? இது போன்ற அமைப்பிற்கான தேவையை எப்படி உணர்ந்தீர்கள்?
சிறு தொழில்களும், சொந்த தொழில்களும் இந்தியாவுக்கு புதிதில்லை. காலங்காலமாகவே நடந்து வருவதுதான். ஆனால் அதில் நிலைத்திருப்பவர்கள் மிகவும் குறைவு. ஒரு தொழிலை தொடங்கிவிட்டு அதை முறையாக நிர்வாகம் செய்யத் தெரியாமல் தவிப்பவர்களும், எதிர்பாராத சிக்கல்களால் தொடர முடியாமல் முடங்குபவர்களும் அதிகம். இதுதான் எல்லா காலத்திலும் நடக்கிறது. 1991-ம் ஆண்டில் அரசுமுறை பயணமாக இங்கிலாந்து சென்றிருந்தேன். அங்கு படிக்காத வேலையற்ற இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்குவது குறித்த திட்டத்தினை அரசு மேற்கொண்டு வருவது குறித்து அறிந்தேன். முக்கியமாக படிக்காத அல்லது அதிகம் படிக்காத இளைஞர்களை அணுகி அவர்களது யோசனைவை கேட்டு அதற்கு உதவி செய்தார்கள். இந்த மாடலில் பிடித்த விஷயம் ஒவ்வொரு இளைஞருக்கு ஒரு ஆலோசகர் வைத்திருந்தார்கள்.தொழில் தொடங்க உதவிகள் செய்வதுடன், அவருக்கான ஆலோசனைகள் மற்றும் சிக்கல்களுக்கான தனிப்பட்ட தீர்வுகளையும் ஆலோசகர் வழங்குவார். இதற்கான வசதியை அரசே அளித்தது. இதையே ஏன் இந்தியாவில் தொடங்கக் கூடாது என அப்போது யோசித்தேன்.
இந்தியாவில் இதற்கான வாய்ப்பு எப்படி இருந்தது? ஆலோசகர்களை உருவாக்க என்ன செய்தீர்கள்?
எனது இந்தத் திட்டம் குறித்து அப்போதைய டாடா குழுமத்தின் தலைவர் ஜே.ஆர்.டி. டாடாவிடம் ஆலோசனை நடத்தினேன். அவரே நிதி உதவியும் செய்தார். பின்னாட்களில் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் சர்வதேச ஏஜென்சிகளிடம் நிதி பெற்றோம். இதன் மூலம் ஆலோசகராக ஆர்வம் கொண்டவர்களுக்கு சர்வதேச அளவிலான பயிற்சிகளை அளித்தோம். தவிர அப்போதே கிராமப்புறங்களுக்குச் சென்றோம். 18 லிருந்து 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களை அணுகி அவர்களிடம் ஐடியாவை கேட்பது. இந்த தொழிலை நீங்க பண்ணுங்க என்று சொல்வது இல்லை. எப்படி பண்ணணும்? என்ன பண்ணனும் என்று தெரியாமல் இருப்பவர்களை வழிநடத்துகிறோம்.
ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு வளர்ச்சி நிலையில் இருந்த காலத்தில், இந்த திட்டத்தை செயல்படுத்த முடிந்ததா?
ஆரம்பத்தில் ஆலோசகர் என்கிற நடைமுறையைக் கொண்டு செல்வது சிரமமாகத்தான் இருந்தது. கிராமப்புறங்களைச் சேர்ந்த ஆர்வம் கொண்ட இளைஞர்களிடம் விளக்கும்போது குரு-சிஷ்யன் போல என்று விளக்குவோம். உங்களிடம் உள்ள யோசனையை சொல்லுங்கள் என போட்டிகளை அறிவித்தோம். பின்தங்கிய ஒடிசா, பிஹார் மாநிலங்களில்தான் ஆர்வமாக இருந்தனர். எல்லா மாநில இளைஞர்களிடமும் ஐடியா இருக்கு அதைக் கொண்டுவர வேண்டும்.
தொழில் முனைவோர்களை உருவாக்க அரசு பல திட்டங்களை வைத்துள்ள நிலையில் பிஒய்எஸ்டி எந்த வகையில் இளைஞர்களை ஈர்க்கும்?
அரசு தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க தனி துறை, திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. இதன் மூலம் இந்த தொழிலை தொடங்குங்கள் என்று சொல்கின்றனர். தொழிலை தொடங்கி வெற்றிகரமாக நடத்துகிறார்களா, தொழிலுக்கு கடன் வாங்கி திருப்பி செலுத்துகிறார்களா என்கிற எந்த கண்காணிப்பும் இல்லை. உண்மையில் சொல்லப்போனால், இதுவரையில் இந்தியாவில் இப்படி பயிற்சி பெற்றவர்கள், உதவி பெற்றவர்கள் எத்தனை பேர் அதை தொடர்ச்சியாக செய்து வருகின்றனர் என்கிற புள்ளிவிவரங்கள் நம்மிடம் இல்லை. இளைஞர்களிடம் உங்கள் யோசனை என்ன? அதில் எப்படி சாதிக்க போகிறீர்கள் என்று கேட்டது இல்லை. அதை நாங்கள் செய்கிறோம். அவர்களின் யோசனையை செயல்படுத்த உதவி செய்கிறோம். ஆலோசகர் இல்லாமல் நிறைய திட்டங்கள் வைத்து என்ன பயன், ஸ்கில் இந்தியா, பான் இந்தியா, மேக் இன் இந்தியா என அறிவித்தாலும், படிக்காத இளைஞர்கள் உள்ளே வருவது எப்படி என தெரியாமல்தானே உள்ளனர்.
தொழில் ஆலோசனை வழங்குவதற்காக ஆலோசகர்களுக்கு கட்டணம் பெறுகிறீர்களா?
தங்களிடம் உள்ள அனுபவத்தை பகிர்ந்து கொள்ள, ஆலோசனை அளிக்க எங்களது ஆலோசகர்கள் கட்டணம் பெறுவதில்லை. அடுத்தவர்களை வளர்க்க வேண்டும் என்று யோசிப்பவர்கள் மட்டுமே ஆலோசகராக உருவாக முடியும்.
இதற்காகத்தான் ஆலோசகர்களுக்கு பயிற்சி அளிக்கிறோம். அவர்கள் தொழில் முனைவோர்களுக்கு வழி காட்டுகின்றனர். தற்போது ஆலோசகரின் மனநிலையை வளர்ப்பதற்காக மத்திய மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட உள்ளோம். குறிப்பாக தொழில் துறை அதிகாரிகள், ஐடிஐ, பாலிடெக்னிக் ஆசிரியர்கள், கடன் வழங்கும் வங்கியாளர்களுக்கு ஆலோசகர் எனும் மனநிலை உருவாகும் போது தொழில்முனைவில் வளர்ச்சி அதிகம் இருக்கும்.
தொழில் தொடங்கும் சிந்தனை சம்பந்தப்பட்ட தனிநபர் சார்ந்தது, ஆலோசகர்கள் எந்த வகை ஆலோசனைகளை அளிக்க முடியும்?
தொழில் தொடங்குவது தனிநபர்களின் யோசனை மட்டுமல்ல, அவர்களது உறவினர்கள், அப்பா, அம்மா, மனைவி என ஏதோ ஒரு வகையில் வெளியிலிருந்தும் ஆலோசனை பெறுகிறார். அந்த ஆலோசனை சரியாகவும் இருக்கலாம், அல்லது தவறான முடிவுகளையும் தரலாம். ஆனால் ஆலோசகரிடமிருந்து ஆலோசனை பெறும்போது தவறான முடிவுகள் தவிர்க்கப்படுகிறது. ஏனென்றால் ஆலோசகரின் ஆலோசனை பல தொழில்முனைவோர்களின் கூட்டு அனுபவமாக இருக்கும்.
தொழிலுக்கான இயந்திரங்கள் வாங்குவது தொடங்கி, கணக்கு வழக்குகளை நிர்வகிப்பது, மார்க்கெட்டிங் என அனைத்துக்கும் ஆலோசகரின் ஆலோசனை அவசியமாகிறது.
இப்போது பல பல்கலைக் கழகங்கள் இன்குபேஷன் செண்டர் வாய்ப்புகளை அளிக்கின்றன. அதுபோல நீங்களும் அளிக்கிறீர்களா?
இன்குபேஷன் மைய வாய்ப்புகளை எல்லோரும் பயன்படுத்திக் கொள்வதில்லை. எங்கோ ஒரு பல்கலைக் கழகத்தில் இருக்கும் இது போன்ற மையத்தை கிரமப்புறத்தில் இருக்கும் படிக்காத இளைஞர் பயன்படுத்திவிட முடியுமா? இன்குபேஷன் என்றால் வெறும் இடம் மட்டுமல்ல, அங்கு போனால் ஆலோசனை, பயிற்சி, நிதி உதவி எல்லாம் இருக்க வேண்டும். இதை எல்லாம் நாங்கள் அளிக்கிறோம். இதை `ஹப் அன் ஸ்போக்’ மாடல் என்கிற வகையில் விர்ச்சுவலாக அளிக்கிறோம்.
25 ஆண்டுகளில் 7,000 தொழில் முனைவோர்கள் உருவாக்கம் என்பது மிகக் குறைவான எண்ணிக்கையாக உள்ளதே?
அப்படித் தோன்றலாம், ஆனால் எங்களிடமிருந்து முதல் முதலில் ஆலோசனை பெற்று 50 ஆயிரம் முதலீட்டில் தொழில் தொடங்கியவர் இன்று கோடீஸ்வரராக தொழிலை தொடர்கிறார். இவர்களால் உருவான வேலைவாய்ப்பு 2.5 லட்சத்துக்கும் அதிகம். இவர்கள் யாரும் தொழிலை பாதியில் விடவில்லை. தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அதுதான் முக்கியம். தொழில் தொடங்கி மூன்று ஆண்டுகளில் நடத்த முடியாமல் போவது நல்லதல்ல.
maheswaran.p@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT