Published : 01 Sep 2023 07:42 AM
Last Updated : 01 Sep 2023 07:42 AM

2 ஆண்டுகளில் ஜவுளி ஏற்றுமதி 776 பில்லியன் டாலராக உயர்வு - மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பெருமிதம்

.கோவையில் 11-வது ஆசிய ஜவுளி கருத்தரங்கை நேற்று தொடங்கி வைத்து பேசிய மத்திய ஜவுளித் தொழில்துறை அமைச்சர் பியூஸ்கோயல்.  அருகில், இணையமைச்சர் தர்ஷனா விக்ரம் ஜர்தோஷி, தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, உணவு மற்றும் உணவு பொருட்கள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி, மத்திய ஜவுளி ஆணையர் ரூப்ராஷி, தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் தலைவர் ரவிசாம், இணை தலைவர் சுந்தர்ராமன், இந்திய ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர் சக்திவேல், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் எம்எல்ஏ உள்ளிட்டோர். படம்: ஜெ.மனோகரன்

கோவை: பல்வேறு சவால்களை எதிர்கொண்டபோதும் கடந்த இரண்டாண்டுகளில் இந்திய ஜவுளி ஏற்றுமதி 776 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாக மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார்.

இந்திய ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு (சிட்டி), தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் (சைமா) உள்ளிட்ட பல்வேறு ஜவுளித்தொழில் அமைப்புகள் தமிழக அரசுடன் இணைந்து நடத்தும் 11-வது ஆசிய ஜவுளி கருத்தரங்கு கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று தொடங்கியது.

அமைச்சர் பியூஸ்கோயல் தலைமை வகித்து கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது: தமிழக அமைச்சர்கள் காந்தி, சக்கரபாணி உள்ளிட்டோர் மத்திய அரசின் திட்டங்களை இணைந்து செயல்படுத்துவதிலும், தமிழக மக்கள் நலனுக்காக நடவடிக்கைகள் மேற்கொள்வதிலும் சிறப்பாக செயல்படுகின்றனர். ஜவுளி சங்கிலி தொடரிலுள்ள அனைத்து ஜவுளி தொழில் அமைப்புகளும் இணைந்து செயல்படுவது மிகவும் வரவேற்கத்தக்கது.

கடந்த ஆண்டு ஜவுளித்துறைக்கு மிகவும் சோதனை காலம். உக்ரைன் போர், கரோனா அச்சுறுத்தல், உலகளாவிய பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொண்ட போதும் கடந்த இரண்டாண்டுகளில் இந்திய ஜவுளித்துறை ஏற்றுமதி 776 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. 55 சதவீத வளர்ச்சி பதிவுசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

‘சிட்டி’ தலைவர் ராஜ்குமார் பேசும்போது, “இந்திய ஜவுளித் தொழில் வளர்ச்சிக்கு மத்திய அமைச்சர் பியூஸ்கோயலின் பங்கு மகத்தானது. நள்ளிரவிலும் சிறப்பு கூட்டங்களை காணொலி வாயிலாக நடத்தி ஜவுளித்தொழில் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை கேட்டறிந்து செயல்பட்டு வருகிறார். பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல்வேறு
சிறப்பு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. ஜவுளித்தொழில் அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்படுவதில் அமைச்சரின் பங்களிப்பு மிக முக்கியமானது” என்றார்.
2 நாட்கள் நடைபெறும் கருத்தரங்கில் வல்லுநர்கள் சிறப்புரையாற்றி தொழில்துறையினருடன் கலந்துரையாட உள்ளனர்.

இந்நிகழ்ச்சியை தேசிய மற்றும் மாநில அளவிலான ஜவுளித் தொழில் அமைப்புகளான ஐடிஎம்எப், ஏஇபிசி, டெக்ஸ்புரோசில், சிஎம்ஏஐ, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், எச்இபிசி உள்ளிட்டவை இணைந்து நடத்துகின்றன. முன்னதாக, ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘சைமா’ வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் நிறுவனர் ஆர்.கே.சண்முகம்செட்டி சிலை மற்றும் புனரமைக்கப்பட்ட ‘சைமா’ கட்டிடத்தை மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் திறந்து வைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x