Last Updated : 30 Aug, 2023 09:54 AM

 

Published : 30 Aug 2023 09:54 AM
Last Updated : 30 Aug 2023 09:54 AM

சந்தை வாய்ப்பு, நிலையான வருவாய் - கிருஷ்ணகிரியில் சிறு விவசாயிகள் அவரை சாகுபடியில் அதிக ஆர்வம்

கிருஷ்ணகிரி அருகே செம்படமுத்தூர் பகுதியில் உள்ள வயலில் செழித்து வளர்ந்து, கொத்துக் கொத்தாகக் காய்த்து கொடியில் அறுவடைக்குத் தயாராக உள்ள அவரைக்காய். படம்: எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: சந்தை வாய்ப்பு மற்றும் நிலையான விலை கிடைப்பதால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் அதிகளவில் அவரை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி, ஓசூர், வேப்பனப்பள்ளி, பேரிகை, சூளகிரி, தேன்கனிக்கோட்டை, பர்கூர், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் காய்கறி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அவரைக் காய், முட்டைக்கோஸ், காலி ஃபிளவர், பீன்ஸ், முள்ளங்கி, புடலங்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் உள்ளிட்ட காய் கறிகளை அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.

இதில், அவரை சாகுபடியில் சிறு, குறு விவசாயிகள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு அறுவடையாகும் அவரைக்காய் ராயக்கோட்டை சந்தை மற்றும் ஓசூர், கிருஷ்ணகிரி உழவர் சந்தைக்கு விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு செல்கின்றனர்.

ராயக்கோட்டை சந்தையிலிருந்து ஏலம் முறையில் வியாபாரிகள் கொள்முதல் செய்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திர, கர்நாடக மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். இதன் மூலம் ஆண்டு முழுவதும் நிலையான வருவாய் கிடைப்பதால் சிறு விவசாயிகள் அவரை சாகுபடியில் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக விவசாயிகள் கூறியதாவது: அவரைச் செடி மற்றும் கொடி வகையாக பயிரிடப்படுகின்றன. பட்டை, கொட்டை, சட்டை, சிவப்பு, நெட்டை, மூக்குத்தி, கோழி அவரை என பல்வேறு ரகங்கள் உள்ளன. இதில், கொடி வகை அவரை சாகுபடியில் அதிக விவசாயிகள் ஈடுபடு கின்றனர். கொடி அவரை சாகுபடிக்கு பந்தல் தேவை. இச்சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை செலவாகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வரை அவரைக் காய் கிலோ ரூ.70 வரை விற்பனையானது. தற்போது, உழவர் சந்தைகளில் கிலோ ரூ.46-க்கும், வெளி சந்தைகளில் கிலோ ரூ.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் விலை மேலும் உயரும். மகசூல் அதிகரித்தாலும் ஓரளவுக்கு நிலையான வருவாய் கிடைக்கிறது. இதனால், அவரை சாகுபடியில் சிறு விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x