Published : 29 Aug 2023 03:59 PM
Last Updated : 29 Aug 2023 03:59 PM
திருவண்ணாமலை: ஆவின் நிறுவன தயாரிப்பில் முக்கியத்துவம் பெற்ற ’நெய்’. தமிழக மக்கள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மாநில மக்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றதாகும்.
சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள், சுவாமி ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்ய ‘இருமுடி’யில் கொண்டு செல்லும் ‘நெய் தேங்காய்’-ல் ஆவின் நெய்யை அதிகளவில் பயன்படுத்துவார்கள். ஆன்மிக வழிபாடு மற்றும் உணவு பழக்கங்களில் ஆவின் நெய் என்பது இன்றியமையாததாகும். இத்தகைய சிறப்பு மிக்க ’ஆவின் நெய்’ உற்பத்தி கடந்த 3 மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளன.
தமிழக சந்தைகளில் ஆவின் நெய் கிடைக்கவில்லை. தனியார் நிறுவனங்களின் நெய் விற்பனை இரு மடங்காக அதிகரித்துள்ளது. தனியார் நிறுவனங்களை விட, ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் விலை குறைவாக உள்ளதால் வரத்து குறைந்து ஆவின் நெய் உற்பத்தி நிறுத்தத்துக்கு காரணமாக உள்ளது. ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.5 முதல் ரூ.8 வரை வேறுபாடு உள்ளது.
இதனால், ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்குவதை தவிர்த்து, தனியார் நிறுவனங்களுக்கு வழங்குகின்றனர். பால் கொள்முதல் அளவு குறைந்ததால், அத்தியாவசிய தேவைக்கு முன்னுரிமை கொடுத்து ஆவின் பால் விற்பனை தொடரப்படுகிறது. இதிலும், சென்னை மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
இதன் எதிரொலியாக, ஆவின் நெய் உற்பத்தி தமிழகம் முழுவதும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்) மூலம் மாதந்தோறும் தயாரிக்கப்பட்டு வந்த 5 டன் நெய் உற்பத்தி தடைபட்டுள்ளது. ஆவினில் தினசரி 3 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. இவற்றில் 90 சதவீத பால் குளிரூட்டப்பட்டு, சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும்.
வேலூர் ஆவினில் 10 சதவீத பால் பாக்கெட் செய்யப்பட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும். தினசரி உபரியாக சேகரிக்கப்படும் பால், ஆவின் நெய் தயாரிக்க பயன்படுத்தப்படும். கோடையில் பால் உற்பத்தி குறைவு, தனியார் விலையில் வேறுபாடு ஆகிய காரணங்களால், பால் கொள்முதல் பாதிக்கப்பட்டுள்ளது.
சராசரியாக 35 ஆயிரம் லிட்டர் பால் வரத்து குறைந்து, தினசரி 2.65 லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால், நெய் தயாரிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்கு 5 டன் நெய் தயாரிக்க, சராசரியாக ஒன்றரை லட்சம் லிட்டர் பால் தேவைப்படுகிறது. இந்த அளவு உள்ள பாலை சேகரிக்க முடியாததால், நெய் உற்பத்தி நடைபெறவில்லை. இந்த நிலை, திருவண்ணாமலை மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் எதிரொலிக்கிறது.
இது குறித்து பால் உற்பத்தியாளர்கள் கூறும்போது, “பகுப்பாய்வு கருவியை பயன்படுத்தி பால் கொள்முதல் செய்ய வேண்டும், பால் விலையை உயர்த்த வேண்டும் என வலியுறுத்துகிறோம். பால் விலையை உயர்த்தி வழங்கினால், ஆவினில் பால் கொள்முதல் அதிகரிக்கும். நெய் உற்பத்தியை மீண்டும் தொடங்கலாம்.பால் உற்பத்தியாளர்களும் பயன்பெறுவர்” என்றனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, “ஆவின் நெய் தரமாகவும், விலை குறைவாக உள்ளதால் விரும்பி வாங்குகின்றோம். ஒரு லிட்டர் ஆவின் நெய் ரூ.630. தனியார் நெய்யை விட ஒரு லிட்டர் ஆவின் நெய் ரூ.100 வரை குறைவாக உள்ளது. ஆவின் நெய் கடந்த 3 மாதங்களாக கிடைக்க வில்லை. பால் கொள்முதலை அதிகரிக்க செய்து, ஆவின் நெய் உற்பத்தியை மீண்டும் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
இது தொடர்பாக ஆவின் அதிகாரி ஒருவர் கூறும்போது, “தினசரி சுமார் 35 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் குறைந்ததால், ஆவின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து வெண்ணையை வாங்கி நெய் தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். மேலும், பால் கொள்முதலை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெய் உற்பத்தி விரைவாக தொடங்கப் படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT