Published : 29 Aug 2023 07:34 AM
Last Updated : 29 Aug 2023 07:34 AM
புதுடெல்லி: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 46-வது வருடாந்திரக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி பங்கேற்று பேசியதாவது:
புதிய இந்தியா தன்னம்பிக்கை மிகுந்தது. அதன் வளர்ச்சி சோர்வற்றது, தடுத்து நிறுத்த முடியாதது. உலகின் தலைமைத்துவமிக்க நாடாக இந்தியா வளர்ந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது வரலாற்று சிறப்புவாய்ந்த நிகழ்வு.
புதிய இந்தியாவின் வளர்ச்சியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முக்கிய பங்காற்றி வருகிறது. அந்தவகையில், நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளில் இதுவரையில் இல்லாத புதிய சாதனையாக 2.6 லட்சம் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், சமூக நல பொறுப்புணர்வு நடவடிக்கைகளுக்காக அதிகபட்சமாக நிறுவனம் ஆண்டுக்கு ரூ.1,217 கோடியை செலவிட்டுள்ளது.
ரிலையன்ஸின் ஒருங்கிணைந்த வருவாய் ரூ.9,74,864 கோடியைத் தொட்டுள்ளது. வரிக்கு முன்பாக நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ.1,53,920 கோடியாகவும், நிகர லாபம் ரூ.73,670 கோடியாகவும் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சுமார் ரூ.12.50 லட்சம் கோடியை முதலீடு செய்துள்ளது.
வீடு மற்றும் அலுவலகங்களுக்கு தேவையான வயர்லெஸ் இண்டர்நெட் சேவையான ஜியோ ஏர்பைபர் வரும் செப்டம்பர் 19-ம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பாதுகாப்பான இணைய உலாவலுக்கான கூடுதல் நன்மைகளுடன் வேகமான 5ஜி இணைய இணைப்பை இந்த சேவை உறுதிப்படுத்தும். இவ்வாறு முகேஷ் அம்பானி பேசினார்.
நீதா அம்பானி விலகல்: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இருந்து முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி விலகியுள்ளார். தனது வாரிசுகளுக்கு வழிவிடும் வகையில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளர். இதையடுத்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இயக்குநர் குழுவில், முகேஷ் அம்பானியின் வாரிசுகளான ஆகாஷ், இஷா, ஆனந்த் அம்பானி ஆகியோர் செயல் சாரா இயக்குநர்களாக நியமிப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT