Published : 28 Aug 2023 03:55 PM
Last Updated : 28 Aug 2023 03:55 PM
மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குநர்களாக முகேஷ் அம்பானியின் மகள் இஷா, மகன்கள் ஆகாஷ், ஆனந்த் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் மிகப் பெரிய தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், எரிசக்தி முதல் தொழில்நுட்பம் வரை பல்வேறு துறைகளில் முன்னணி வகித்து வருகிறது. இதன் தலைவராக முகேஷ் அம்பானி இருந்து வருகிறார். இவரது மூத்த மகனான ஆகாஷ் அம்பானி, ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் தலைவராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார். இதையடுத்து, ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் பொறுப்பு இஷா அம்பானிக்கும், எரிசக்தித் துறை பொறுப்பு ஆனந்த் அம்பானிக்கும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், அனைத்து நிறுவனங்களையும் உள்ளடக்கிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவின் நிர்வாகமற்ற இயக்குநர்களாக மூவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, இதற்கான ஒப்புதலை வழங்குவதற்காக இயக்குநர்கள் குழுக் கூட்டம் கூடியது. அதில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "மனித வளம், நியமனம் மற்றும் ஊதியக் குழு ஆகியவற்றின் பரிந்துரையின் பேரில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு, இஷா அம்பானி, ஆகாஷ் அம்பானி மற்றும் அனந்த் அம்பானி ஆகியோரை நிர்வாகமற்ற இயக்குநர்களாக நியமிப்பதற்கான ஒப்புதலுக்காக பங்குதாரர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. பங்குதாரர்களின் ஒப்புதலுக்குப் பிறகு அவர்கள் பதவி ஏற்கும் தேதியிலிருந்து அவர்களின் நியமனம் நடைமுறைக்கு வரும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குநராக இருந்து வந்த நீதா அம்பானி, அதில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ரிலையன்ஸ் ஃபவுண்டேஷனில் கூடுதல் கவனம் செலுத்தும் நோக்கில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். அதேநேரத்தில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டத்தின் நிரந்தர அழைப்பாளராக அவர் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற இயக்குநர்கள் குழுக் கூட்டத்தில், நீதா அம்பானி அளித்து வந்து மதிப்பு மிக்க பங்களிப்புக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT