Last Updated : 26 Aug, 2023 09:49 PM

 

Published : 26 Aug 2023 09:49 PM
Last Updated : 26 Aug 2023 09:49 PM

புகழ்பெற்ற சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம்: மரவள்ளி விவசாயிகளுக்கு வளர்ச்சி வாய்ப்பு

ஜவ்வரிசிக்கான புவிசார் குறியீடு சான்றிதழை, மாவட்ட ஆட்சியர் கார்மேகத்திடம் தமிழ்நாடு அரசு புவிசார் குறியீடு பதிவு பெற்ற பொருட்களின் ஒருங்கிணைப்பு அலுவலர் சஞ்சய் சாய் காந்தி வழங்கினார்.

சேலம்: இந்தியாவில், சேலத்தை மையமாகக் கொண்டு பெருமளவு ஜவ்வரிசி உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், சேலம் ஜவ்வரிசிக்கு, புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மரவள்ளி சாகுபடி விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் வளர்ச்சி பெறுவார்கள் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சேலம், நாமக்கல் உள்பட அண்டை மாவட்டங்களில் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி அதிகமாக உள்ள நிலையில், இங்கு மரவள்ளிக் கிழங்கு மாவில் இருந்து ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் மாவு உற்பத்தியும் அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. ஜவ்வரிசி என்றாலே சேலம் என்று குறிப்பிடப்படும் அளவுக்கு, சேலத்தை மையமாகக் கொண்டு, ஜவ்வரிசி உற்பத்தி அதிகளவில் நடைபெறுவதுடன், ஜவ்வரிசி விற்பனை மையமாக, சேலம் சேகோ சர்வ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஜவ்வரிசிக்கான புவிசார் குறியீடு வழங்கும் விழா, சேலம் குரங்குச்சாவடியில் உள்ள சேகோ சர்வ் நிறுவனத்தில் இன்று நடைபெற்றது. விழாவில், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகத்திடம், ஜவ்வரிசிக்கான புவிசார் குறியீடு சான்றிதழை, தமிழக அரசின் புவிசார் குறியீடு பதிவு பெற்ற பொருட்களின் ஒருங்கிணைப்பு அலுவலர் சஞ்சய்காந்தி வழங்கினார்.

சேகோ சர்வ் நிறுவன செயலாட்சியர் லலித் ஆதித்ய நீலம், சேலம் மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் சிவக்குமார், வேளாண்மை இணை இயக்குநர் சிங்காரம், மரவள்ளி விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில், மாவட்ட ஆட்சியர் கார்மேகம் பேசியது: “கடந்த 1880-ம் ஆண்டுகளில் வறட்சி ஏற்பட்டபோது, கேரள மாநிலத்தில் மரவள்ளி கிழங்கில் இருந்து கிடைக்கும் ஜவ்வரிசி உணவாக உட்கொள்ளப்பட்டது. சேலம் மாவட்டத்தில் 32 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவுக்கு, மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டு, ஹெக்டேருக்கு 38 டன் மரவள்ளிக் கிழங்கு விளைகிறது. சேகோ நிலம் என்ற பெருமை சர்வதேச அளவில் சேலத்துக்கு உண்டு.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் 5.50 மில்லியன் டன் ஜவ்வரிசியில், பெரும்பகுதி தமிழகத்திலேயே உற்பத்தியாகிறது. இந்தியாவில், ஜவ்வரிசிக்கு என செயல்பட்டு வரும் ஒரே விற்பனை மையமாக, சேகோ சர்வ் இருக்கிறது. இதில், சேலம், நாமக்கல், தருமபுரி, ஈரோடு, பெரம்பலூர், திருச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டத்தினர் உள்ளிட்ட 374 பேர் உறுப்பினர்கள் உள்ளனர்.

இங்கு 2.17 லட்சம் மூட்டைகளை பாதுகாக்கும் வசதி, மின்னணு ஏல விற்பனை வசதி, ஆய்வக வசதி ஆகியவை உள்ளன. சேகோ சர்வ் 2022-23-ம் ஆண்டில் ரூ.557 கோடி, 2023-24-ம் ஆண்டின் ஜூலை வரை ரூ.223 கோடி என விற்று முதல் ஈட்டியுள்ளது. 2022-23-ம் ஆண்டில் மட்டும் ரூ.4209.12 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

புவிசார் குறியீடு மூலம் ஜவ்வரிசிக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதனால், மரவள்ளி பயிரிடும் விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் வளர்ச்சி பெறுவர். ஜவ்வரிசி மற்றும் அதன் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் மதிப்பும் அதிகரிக்கும். ஜவ்வரிசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்பு அதிகரித்துள்ளது” என்றார்.

புவிசார் குறியீடு பதிவு பெற்ற பொருட்களின் ஒருங்கிணைப்பு அலுவலர் சஞ்சய்காந்தி பேசியது: “நாடு முழுவதும் 490 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. தமிழகத்தில் 59 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு கிடைத்திருப்பதன் மூலம் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான கண்காட்சியில், ஜவ்வரிசியைக் காட்சிப்படுத்த முடியும். நாடு முழுவதும் வெவ்வேறு பெயர்களில் ஜவ்வரிசி விற்பனை செய்யப்படுகிறது. இனி சேலம் ஜவ்வரிசி என்ற பெயரில் விற்பனையாகும். ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதன் மூலம் மரவள்ளி பயிரிடும் விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளர்களுக்கு சாதகமான நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x