Published : 26 Aug 2023 07:39 PM
Last Updated : 26 Aug 2023 07:39 PM
தேனி: ஓணம் பண்டிகைக்காக சீலையம்பட்டி பூ மார்க்கெட்டுக்கு கேரள வியாபாரிகள் வரத் தொடங்கி உள்ளனர். இதனால் பூக்களின் விலை உயர்ந்து வருகிறது.
ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் மகாபலி சக்கரவர்த்தி மக்களை காண வருவதாக ஐதீகம். இதற்காக அவருக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் இப்பண்டிகை அங்கு கொண்டாடப்படுகிறது. இத்திருவிழா வரும் 29-ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்நாட்களில் கேரளாவில் பூக்களின் தேவை அதிகம் இருக்கும் என்பதால் இதைக் கணக்கிட்டு தேனி மாவட்டம் பல்லவராயன்பட்டி, கோட்டூர், பாலார்பட்டி, சீலையம்பட்டி, வேப்பம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் பூ விவசாயம் அதிகளவில் நடைபெறுகிறது.
தற்போது மகசூலுக்கு வந்துள்ள நிலையில், இவற்றை அறுவடை செய்து சந்தைப்படுத்துவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சின்னமனூர் அருகே சீலையம்பட்டியில் பிரபல பூ மார்க்கெட் உள்ளதால் சுற்றுப் பகுதியில் அறுவடை செய்யப்படும் பூக்கள் இங்கு கொண்டு வரப்படும். இங்கிருந்து கேரளா மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் பூக்கள் அனுப்பப்படும்.
தற்போது ஓணம் பண்டிகை கொள்முதலுக்காக கேரள வியாபாரிகள் வரத் தொடங்கி உள்ளனர். இதனால் கடந்த வாரங்களை விட பூக்களின் விலை உயர்ந்துள்ளது. இது குறித்து பூ வியாபாரி ராஜா கூறுகையில், “கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பூக்களின் விலை குறைவாகவே உள்ளது. இருப்பினும் கேரள வியாபாரிகள் வரத் தொடங்கியதால் விலை அதிகரித்து வருகிறது. சிலநாட்களில் இதன் விலை மேலும் உயரும். இன்று (சனி) ஒரு கிலோ செண்டு பூ ரூ.100, மல்லிகை ரூ.800, துளசி ரூ.50, சம்பங்கி ரூ.200, பட்டன்ரோஸ் ரூ.300, பன்னீர்ரோஸ் ரூ.200 என்ற அளவில் விற்பனையானது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT