Published : 25 Aug 2023 04:02 PM
Last Updated : 25 Aug 2023 04:02 PM
புதுடெல்லி: "உலக நாடுகளின், குறிப்பாக தெற்கு உலகின் சமமான பொருளாதார வளர்ச்சிக்காக இந்தியா உறுதிபூண்டுள்ளது. இந்தியாவின் வளர்ச்சி, உலக எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்" என்று பி20 மாநாட்டின் தலைவரும், டாடா சன்ஸ் தலைவருமான என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
பிசினஸ் 20 அல்லது ‘பி20 மாநாடு இந்தியா 2023’ மாநாடு இன்று புதுடெல்லியில் தொடங்கியது. இம்மாநாடு R.A.I.S.E என்னும் கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டது. அதாவது பொறுப்பு, துரிதம், புதுமை, நீடித்தத் தன்மை, வணிக சமநிலை ஆகியவையே இதன் பொருள். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், தர்மேந்திர பிரதான், ஜெய்சங்கர், பல்வேறு நாட்டு அமைச்சர்கள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வியாபார நிறுவனத் தலைவர்கள் கலந்து கொண்டு, உலகளாவிய வணிகங்கள் சார்ந்த பிரச்சினைகள் குறித்த தங்களின் கருத்துகளை பகிர்ந்துகொள்கின்றனர். ஆக.27ம் தேதி நடைபெறும் சிறப்பு அமர்வில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார்.
மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய இந்தியா ஜி20 ஷெர்பா அமிதாப் காந்த், "இந்தியா வேகமான பொருளாதார வளர்ச்சி கண்டு வருகிறது. விரைவில் அது உலகின் மூன்றாவது பொருளாதார நாடாக மாறும்" என்றார். மேலும் இந்தியாவின் ஜி20 தலைமையை மக்கள் தலைமையாக மாற்றுவதற்கு நான்கு முக்கியமான முன்னுரிமைகளை அவர் வலியுறுத்தினார். அது குறித்து அவர் கூறுகையில், "முன்னிலைப்படுத்துவதை தவிர்த்து வலிமையான, நீடித்த, அனைவரையும் உள்ளடக்கிய, சமமான பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தும் கொள்கையை இந்தியா முன்வைக்கிறது.
நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான வேகத்தினை துரிதப்படுத்துதல், காலநிலை குறித்த நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம், தெற்குலகின் வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்காக காலநிலை நிதிகளை விரைவுபடுத்தல் மற்றும் பெண்களின் தலைமையிலான முன்னேற்றம் போன்றவை மற்ற முன்னுரிமைகளாகும்" என்று தெரிவித்தார்.
இன்றைய தொடக்க விழாவில் பேசிய டாடா சன்ஸ் தலைவரும், பி20 மாநாட்டின் தலைவருமான என்.சந்திரசேகரன் கூறுகையில்,"உலகின், குறிப்பாக தெற்கு உலகின் சமமான பொருளாதார வளர்ச்சிக்காக இந்தியா உறுதிபூண்டுள்ளது. இந்தியாவின் வளர்ச்சி உலகின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்" என்று தெரிவித்தார்.
மாநாட்டின் முதல் நாளான இன்று பி20 முன்னுரிமைகள், உலகுக்கான இந்தியாவின் பரிந்துரைகள் உள்ளிட்ட 7 அமர்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் மாஸ்டர்கார்டு தலைமை செயல் அதிகாரி மைக்கேல் மீய்பேக் மற்றும் உலக பொருளாதார மன்றத்தின் தலைவர் போகர் ப்ரென்டே உள்ளிட்ட பல்வேறு இந்திய வணிகத் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT