Published : 24 Aug 2023 06:21 PM
Last Updated : 24 Aug 2023 06:21 PM
புதுடெல்லி: அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய முதல் 4 உலகப் பொருளாதாரங்களின் வளர்ச்சியைவிட, இந்தியாவின் வளர்ச்சி விகிதம் அதிகம் என்று மத்திய நிதித் துறை செயலாளர் டி.வி.சோமநாதன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் நடைபெற்ற இண்டியாஸ்போரா ஜி20 அமைப்பின் கூட்டத்தில் மத்திய நிதித் துறை செயலாளர் டி.வி. சோமநாதன் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: "இந்தியா தற்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. முதல் நான்கு இடங்களில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி உள்ளன. இந்த மாதத்தின் தொடக்கத்தில் வெளியான எஸ்&பி குளோபல் அறிக்கை, இந்தியாவின் பொருளாதாரம் தற்போது 3.4 டிரில்லியன் அமெரிக்க டாலராக இருப்பதாகவும், இது 2031-ஆம் ஆண்டுக்குள் 6.7 டிரில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என்றும் கணித்துள்ளது.
தற்போதைய நிலையில், எந்த அளவீட்டிலும் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் மற்ற 4 நாடுகளின் வளர்ச்சி வகிதங்களைவிட மிக வேகமாக உள்ளது. இந்த நான்குமே எதிர்காலத்தில் இந்தியாவை விட குறைவான வளர்ச்சி விகிதங்களைக் கொண்டிருக்கக்கூடும். இந்தியா எதிர்காலத்தின் மிகப் பெரிய வளர்ச்சி வாய்ப்பாக உள்ளது. ஏனெனில், மற்ற பெரிய பொருளாதாரங்களை விட இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது.
2022-23-ல் இந்தியப் பொருளாதாரம் 7.2 சதவீதமாக வளர்ந்தது. நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 6-6.5 சதவீதமாக இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். மக்கள்தொகை அடிப்படையில் இந்தியா மிகப்பெரிய நாடு. அனைத்து சவால்களையும் இந்தியா திறம்பட எதிர்கொள்கிறது. இந்தியாவில் முன்னேற்றம் என்பது ஜிக்-ஜாக் கோடுபோல் தெரியலாம். நாங்கள் இந்தியா தொடர்ந்து முன்னேறும். வரவிருக்கும் ஆண்டுகளில், பரோபகாரத்தை விட முதலீடு முக்கியமானது, முதலீட்டை விட தொழில்நுட்ப பரிமாற்றம் முக்கியமானது, பணத்தை விட உங்கள் அறிவு முக்கியமானது" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT